மாற்றுத்திறனாளிகள் கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட முடிவு


பெரம்பலூர்
x
பெரம்பலூர்
தினத்தந்தி 13 Sep 2021 5:31 PM GMT (Updated: 13 Sep 2021 5:31 PM GMT)

மாற்றுத்திறனாளிகள் கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

பெரம்பலூர்
பெரம்பலூரில், மாவட்ட தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் பேரவை கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார். சங்கத்தின் மாநில துணைத் தலைவர் பாரதி அண்ணா கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதையடுத்து மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரமேஷ், தலைவர் பெருமாள், பொருளாளர் ராஜசேகர் ஆகியோர் பேசினர். அனைத்து ரெயில்களிலும் ஏற்கனவே நடைமுறையில் இருந்த மாற்றுத்திறனாளிகளுக்கான தனிப்பெட்டி வசதியை வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளியின் குடும்ப அட்டையை ஏ.ஏ.ஒய். அட்டையாக மாற்றி கொடுக்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு முழுமையாக வழங்க வேண்டும். மற்ற மாநிலங்களில் உள்ளதைபோல் போது தமிழகத்திலும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாத உதவித்தொகையாக ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். அனைத்து சமூக திட்டங்கள், வீடு, வீட்டுமனை, வேலை வாய்ப்பு உள்ளிட்ட அனைத்திலும் 5 சதவீதம் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கிட வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி அடையாள அட்டை உள்ள அனைவருக்கும் உதவித்தொகை அளிக்க வேண்டும். மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் தேவையான உதவி உபகரணங்கள் வழங்க வேண்டும். மாவட்டத்தில் கலெக்டர் தலைமையில் 2 மாதத்திற்கு ஒரு முறையும், வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் மாதம் ஒருமுறையும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்பட வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த மாதம் (அக்டோபர்) 5-ந் தேதி பெரம்பலூர், ஆலத்தூர், வேப்பூர், வேப்பந்தட்டை ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் வட்டார வளர்ச்சி அலுவலர்களை சந்தித்து மாற்றுத்திறனாளிகள் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபடுவதும் எனவும், அடுத்த மாதம் 25-ந் தேதி முதல் கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவதும் எனவும் பேரவையில் முடிவு எடுக்கப்பட்டது. பேரவையில் மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story