தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மயங்கி விழுந்த பெண்


தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மயங்கி விழுந்த பெண்
x
தினத்தந்தி 14 Sept 2021 1:50 AM IST (Updated: 14 Sept 2021 1:50 AM IST)
t-max-icont-min-icon

தனக்கு தவறான அறுவை சிகிச்சை செய்ததாக புகார் அளித்த பெண், தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மயங்கி விழுந்ததால் பரபரப்பு நிலவியது.

தஞ்சாவூர்:
தனக்கு தவறான அறுவை சிகிச்சை செய்ததாக புகார் அளித்த பெண், தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மயங்கி விழுந்ததால் பரபரப்பு நிலவியது.
அறுவை சிகிச்சை
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாதுளம்பேட்டை தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார். இவருடைய மனைவி மலர்கொடி (வயது45). இவருக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு தனியார் மருத்துவமனையில் கர்ப்பபை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்படுவதால் தனியார் மருத்துவமனை நிர்வாகத்திடம் இது பற்றி புகார் தெரிவித்தார். ஆனால் அவர்கள் நாங்கள் சரியாக தான் அறுவை சிகிச்சை செய்து இருப்பதாக கூறி அனுப்பி வைத்துவிட்டனர். இதனால் மலர்கொடி தனது 2 மகள்களுடன் தஞ்சை கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வந்தார்.
புகார் மனு
அவர், கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தார். அந்த மனுவில், தவறான முறையில் அறுவை சிகிச்சை செய்ததால் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகிறேன். உடல்ரீதியாகவும் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறேன். எனவே தனியார் மருத்துவமனை நிர்வாகத்தினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார்.
மனு அளித்துவிட்டு வந்த மலர்கொடி திடீரென கலெக்டர் அலுவலக வளாகத்தில் மயங்கி கீழே விழுந்தார். இதனால் பரபரப்பு நிலவியது. இதை பார்த்த மக்கள் சிலர், ஓடி வந்து மலர்கொடி முகத்தில் தண்ணீரை தெளித்து மயக்கத்தை தெளிய வைத்தனர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரும் விரைந்து வந்து அவருக்கு உதவி செய்தனர். பின்னர் மலர்கொடியை நிழலுக்கு அழைத்து சென்று நாற்காலியில்அமர வைத்தனர். கலெக்டர் அலுவலக மருத்துவ முகாமில் பணியில் இருந்த டாக்டருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பரிசோதனை
அவர் விரைந்து வந்து மலர்கொடிக்கு ரத்தஅழுத்தம் சீராக இருக்கிறதா? என பரிசோதனை மேற்கொண்டார். பின்னர் அவர், அரசு மருத்துவமனைக்கு சென்று உடல்நிலையை பரிசோதித்து கொள்ளும்படி மலர்கொடிக்கு அறிவுரை வழங்கினார். இதையடுத்து தனது மகள்களுடன் மலர்கொடி அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

Next Story