தொடர்மழையின் காரணமாக பாண்டியாறு குடிநீர் திட்ட குழாய்களில் அடைப்பு


தொடர்மழையின் காரணமாக பாண்டியாறு குடிநீர் திட்ட குழாய்களில் அடைப்பு
x
தினத்தந்தி 14 Sep 2021 4:41 PM GMT (Updated: 14 Sep 2021 4:55 PM GMT)

கூடலூர் பகுதியில் பெய்து வரும் தொடர்மழையின் காரணமாக பாண்டியாறு குடிநீர் திட்ட குழாய்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனை சரிசெய்யும் பணியில் நகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

கூடலூர்,

கூடலூர் பகுதியில் கடந்த 1 வாரமாக தொடர் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அனைத்து ஆறுகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த நிலையில் தொடர் மழையால் கூடலூர் பகுதி பொதுமக்களின் குடிநீர் ஆதாரமாக திகழும் பாண்டியாறு உள்பட அனைத்து குடிநீர் திட்ட தடுப்பணைகளிலும் சேறும் சகதியாமாக தண்ணீர் உள்ளது.

 இதன் காரணமாக கூடலூர் நகருக்கு கொண்டு செல்லப்படும் ராட்சத குழாய்கள் பல இடங்களில் சேறு நிறைந்து அடைப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனால் நகரப்பகுதியில் குடிநீர் வினியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று காலை முதல் மழையின் தாக்கம் பரவலாக குறைந்து காணப்பட்டது. இதனால் ராட்சத குழாய்களை சீரமைக்கும் பணியை நகராட்சி ஊழியர்கள் தொடங்கினர்.

இதற்காக பாண்டியாற்றில் நீச்சல் அடித்தவாறு நகராட்சி ஊழியர்கள் ராட்சத குழாய்களை சீரமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். அப்போது தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால் இடுப்பில் கயிறுகளை கட்டிக் கொண்டு பாதுகாப்பை உறுதி செய்த பிறகு பணியை தொடர்ந்து செய்தனர்.

இதேபோல் ஓவேலி பகுதியில் உள்ள ஆத்தூர் குடிநீர் திட்ட தடுப்பணையிலும் சேறு நிறைந்துள்ளதை அகற்றும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்தினர் கூறியதாவது:-

தொடர் பலத்த மழையால் சில தினங்களுக்கு முன்பு பாண்டியாறு தடுப்பணையில் உள்ள ராட்சத குழாய்களில் அடைப்புகள் ஏற்பட்டது. ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் உடனடியாக சீரமைக்க முடியவில்லை. தற்போது மழையின் தாக்கம் சற்று குறைந்து உள்ளதால் ஆற்றில் இறங்கி சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மழை அதிகமாக பெய்யும் சமயத்தில் குழாய்களில் அடைப்பு அடிக்கடி ஏற்படுகிறது. எனவே குடிநீர் வினியோகத்தில் தாமதம் ஏற்படுகிறது. எனவே பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். 

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story