முதுமலைக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது
முதுமலைக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது
கூடலூர்
தொடரும் கட்டுப்பாடுகளால் முதுமலைக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கட்டுப்பாடு அமல்
தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பரவலால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது நோய்த்தொற்று குறைந்துவிட்டதால் தமிழகத்தில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து வரும் பயணிகள் பொதுமக்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் பெறவேண்டும் என கட்டுப்பாடு அமலில் உள்ளது. இதே நடைமுறை கர்நாடக மாநிலத்திலும் உள்ளது.
நீலகிரி மாவட்டம் கேரளா-கர்நாடகா எல்லைகளில் உள்ளது. இதனால் வெளிமாநிலங்களில் இருந்து நீலகிரிக்கு வர கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். இச்சான்றிதழ் இல்லாதவர்களை கூடலூர் பகுதியில் உள்ள மாநில எல்லைகளில் போலீசார் சுகாதாரத்துறையினர் திருப்பி அனுப்பி வருகின்றனர்.
சுற்றுலா பயணிகள் வருகை குறைவு
இந்த நிலையில் கடந்த 3-ந் தேதி முதுமலை புலிகள் காப்பகம் திறக்கப்பட்டது. தொடர்ந்து சுற்றுலா பயணிகள் வரவும் அனுமதி அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வாகன மற்றும் யானை சவாரி தொடங்கியது.
பின்னர் கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக யானை சவாரி மட்டும் ரத்து செய்யப்பட்டது.ஆரம்பத்தில் முதுமலைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. ஆனால் வெளிமாநிலங்களில் இருந்து நீலகிரிக்கு வர கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் வருகை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.
மேலும் நீலகிரியில் இருந்து வெளிமாநிலங்களுக்கு செல்லவும் கட்டுப்பாடுகள் தொடருவதால் மாநிலங்களுக்கு இடையே மக்கள் சென்று வருவது பெருமளவு குறைந்தே காணப்படுகிறது.
தங்கும் விடுதி
இதுகுறித்து முதுமலை வனத்துறையினர் கூறியதாவது:-
ஊரடங்குக்கு முன்பாக ஒரு வாரத்தில் 5,000 சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
ஆனால் தற்போது கொரோனா பரவலால் பல்வேறு கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமலில் உள்ளது. இதனால் வெளி மாநிலங்களில் இருந்து பெரும்பான்மையாக சுற்றுலா பயணிகள் முதுமலைக்கு வருவதில்லை.
அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி முதுமலை திறக்கப்பட்ட நாள் முதல் இதுவரை 3 ஆயிரம் பேர் மட்டுமே வந்து சென்றுள்ளனர். மேலும் விடுமுறை தினத்திலும் சுற்றுலா பயணிகள் வரத்து எதிர்பார்த்த அளவு இல்லை.
இதேபோல் வனத்துறைக்கு சொந்தமான தங்கும் விடுதிகளிலும் சுற்றுலா பயணிகள் தங்குவதில்லை. இதனால் 99 சதவீத அறைகள் காலியாக உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story