அரசு பஸ் சிறைபிடிப்பு


அரசு பஸ் சிறைபிடிப்பு
x
தினத்தந்தி 14 Sep 2021 5:41 PM GMT (Updated: 14 Sep 2021 5:41 PM GMT)

குமரலிங்கத்தில் அரசு பஸ் நிறுத்தி பயணிகளை ஏற்றாமல் சென்றதால் ஆவேசமடைந்த பொதுமக்கள் பஸ்சை சிறைபிடித்தனர்.

போடிப்பட்டி
குமரலிங்கத்தில் அரசு பஸ் நிறுத்தி பயணிகளை ஏற்றாமல் சென்றதால் ஆவேசமடைந்த பொதுமக்கள் பஸ்சை சிறைபிடித்தனர்.
பொதுப்போக்குவரது
மடத்துக்குளத்தையடுத்த குமரலிங்கம், கொழுமம், ருத்ராபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் அதிக அளவில் உடுமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு வேலைக்காக தினசரி சென்று வருகின்றனர். மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களும் அதிக எண்ணிக்கையில் இங்கு உள்ளனர்.இவர்கள் பெரும்பாலும் பொதுப்போக்குவரத்தையே நம்பியிருக்க வேண்டிய நிலையில் உள்ளனர். ஆனால் காலை வேளையில் குறைந்த எண்ணிக்கையிலான பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. 
இதனால் பஸ்ஸில் முண்டியடித்து ஏறி, படிக்கட்டு வரை தொங்கிக்கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பஸ்ஸில் பயணிகள் எண்ணிக்கை அதிக அளவில் இருக்கும்போது ருத்ராபாளையம், குமரலிங்கம் உள்ளிட்ட நிறுத்தங்களில் பஸ்ஸை நிறுத்தாமல் சென்று விடுவதாகக் கூறப்படுகிறது.இதனால் குறித்த நேரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல முடியாமல் மாணவர்களும், வேலைக்கு செல்பவர்களும் அவதிப்பட்டனர்.
சிறைபிடிப்பு
இந்தநிலையில் நேற்று காலை குமரலிங்கம் பஸ் நிலையத்துக்கு வந்த அரசு பஸ்ஸில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததால் பயணிகளை ஏற்ற மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆவேசமடைந்த பொதுமக்கள் பஸ்ஸை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து டிரைவர், கண்டக்டர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பொதுமக்கள் சமாதானமடையாததால் உயர் அதிகாரிகளிடம் தொலைபேசியில் பேசச் செய்தனர். 
அவர்கள் கூடுதல் பஸ் அனுப்பி வைப்பதாக உறுதியளித்ததைத்தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். ஆனால் பஸ்சில் அதிகமான எண்ணிக்கையில் பயணிகள் ஏறியதால் சமூக இடைவெளியில்லாமல் முண்டியடித்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளதால் காலை நேரத்தில் இந்த வழித்தடத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Next Story