நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் நடைபெறும் பகுதிகளில் நலத்திட்டங்கள் வழங்கக்கூடாது-கலெக்டர் ஸ்ரேயாசிங் அறிவிப்பு


நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் நடைபெறும் பகுதிகளில் நலத்திட்டங்கள் வழங்கக்கூடாது-கலெக்டர் ஸ்ரேயாசிங் அறிவிப்பு
x
தினத்தந்தி 14 Sep 2021 8:32 PM GMT (Updated: 14 Sep 2021 8:32 PM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் நடைபெறும் பகுதிகளில் நலத்திட்டங்கள் எதுவும் வழங்கக்கூடாது என கலெக்டர் ஸ்ரேயாசிங் தெரிவித்தார்.

நாமக்கல்:
இன்று வேட்புமனு தாக்கல்
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத செங்கல்பட்டு, காஞ்சீபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் அடுத்த மாதம் (அக்டோபர்) 6 மற்றும் 9-ந் தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடக்கிறது. அதனுடன் சேர்த்து மற்ற மாவட்டங்களில் காலியாக உள்ள மாவட்ட, ஒன்றிய, ஊராட்சி பதவிகளுக்கும் அக்டோபர் 9-ந் தேதி தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்து உள்ளது.
அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவி ஒன்று, ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் பதவி ஒன்று, 5 ஊராட்சி தலைவர்கள் மற்றும் 18 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என மொத்தம், 25 பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது.
மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர், ஒன்றியக்குழு உறுப்பினர் மற்றும் ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடுபவர்கள் அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுபவர்கள், அந்தந்த ஊராட்சி மன்ற அலுவலகத்திலும் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுவோர் நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலரிடமும் வேட்புமனுவை தாக்கல் செய்யலாம்.
ஆலோசனை கூட்டம்
காலியாக உள்ள பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு இருப்பதால், நன்னடத்தை விதிகளும் அமலுக்கு வந்து உள்ளது. இது தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில் வெண்ணந்தூர், எருமப்பட்டி வட்டாரம் முழுவதும் மற்றும் ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர் தேர்தல் நடைபெற உள்ள 23 ஊராட்சிகளிலும் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்து உள்ளன.
நலத்திட்டங்கள் வழங்க கூடாது
தேர்தல் நடைபெறும் எந்த பகுதியிலும், நலத்திட்டங்கள் மற்றும் பணிகளுக்காக புதிதாக நிதி விடுவிக்கப்படுவதும், பணி ஒப்பந்தங்கள் வழங்குவதும் கூடாது. இருப்பினும் ஏற்கனவே நிறைவு செய்யப்பட்ட பணிகளுக்காக வரையறுக்கப்பட்டு உள்ள வழிமுறைகளை கடைபிடித்து நிதி துறையின் ஒப்புதலுடன், நிதி ஒதுக்கீடு செய்வதற்கு தடை ஏதும் இல்லை. ஏற்கனவே முடிவுபெறும் தருவாயில் உள்ள திட்டங்களை நிறுத்தவோ அல்லது தாமதப்படுத்தவோ தேவையில்லை. மாதிரி நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ள பகுதிகளில் உள்ளாட்சி பிரதிநிதிகள் தங்களது அலுவலக ஊர்திகளை பயன்படுத்த தடை செய்யப்பட்டு உள்ளது.
மேலும் வேட்பாளர்கள், கட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து மாதிரி நன்னடத்தை விதி கையேடு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. அதை அனைவரும் பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story