அர்ச்சகர்களை சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுத்த நடவடிக்கை- கலெக்டர் செந்தில்ராஜ் ஆலோசனை


அர்ச்சகர்களை சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுத்த நடவடிக்கை- கலெக்டர் செந்தில்ராஜ் ஆலோசனை
x
தினத்தந்தி 15 Sep 2021 3:50 PM GMT (Updated: 15 Sep 2021 3:50 PM GMT)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அர்ச்சகர்களை சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுத்துவது குறித்து நேற்று கலெக்டர் செந்தில்ராஜ் ஆலோசனை நடத்தினார்.

திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அர்ச்சகர்களை சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுத்துவது குறித்து நேற்று கலெக்டர் செந்தில்ராஜ் ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனை கூட்டம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று முன்தினம் ஆய்வு செய்தார். அப்போது கோவிலில் வி.ஐ.பி. தரிசனத்தை கட்டுப்படுத்திடவும், அர்ச்சகர்களை சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுத்துவது குறித்தும் மாவட்ட கலெக்டர் நடவடிக்கை மேற்கொள்வார் என அறிவித்தார்.
இதையடுத்து, கோவில் வளாகத்தில் உள்ள கோவிந்தம்மாள் ஆதித்தனார் திருமண மண்டபத்தில் நேற்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் அர்ச்சகர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது.

அர்ச்சகர்களிடம் கருத்து கேட்பு

அப்போது, அர்ச்சகர்களை சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுத்துவது தொடர்பாக அர்ச்சகர்களிடம் மாவட்ட கலெக்டர் கருத்துக்களை கேட்டறிந்தார். மேலும் அவர் பேசும் போது, கோவிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு செல்லும் பாதையினை சீரமைப்பது தொடர்பாக 17-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நேரில் ஆய்வு செய்யப்படும். அதேபோல், கோவில் நிர்வாகம் சார்பில் அர்ச்சகர்களுக்கு வழங்கப்படவேண்டிய அர்ச்சனை பங்குத்தொகை உள்ளிட்டவற்றை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.

கலந்து கொண்டவர்கள்

கூட்டத்தில், உதவி கலெக்டர் (பயிற்சி) ஸ்ருதஞ்ஜெய் நாராயணன், திருச்செந்தூர் உதவி கலெக்டர் கோகிலா, உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ்சிங், கோவில் இணை ஆணையர் (பொறுப்பு), அன்புமணி, தக்கார் பிரதிநிதியும், ஒய்வுபெற்ற கால்நடை துறை உதவி இயக்குனருமான பாலசுப்பிரமணிய ஆதித்தன், திருச்செந்தூர் தாசில்தார் (பொறுப்பு) ராமச்சந்திரன், மண்டல துணை தாசில்தார் பாலசுந்தரம், வருவாய் ஆய்வாளர் மணிகண்டன்வேல், கோவில் உதவி ஆணையர் செல்வராஜ், கண்காணிப்பாளர்கள் ஆனந்த், ராமசுப்பிரமணியன், மாரிமுத்து, விடுதி மேலாளர் சிவநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story