திருவள்ளூர் மாவட்டத்தில் 3 ஆயிரத்து 824 முகாம்கள் மூலம் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்க ஏற்பாடு - கலெக்டர் தகவல்


திருவள்ளூர் மாவட்டத்தில் 3 ஆயிரத்து 824 முகாம்கள் மூலம் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்க ஏற்பாடு - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 17 Sep 2021 12:18 AM GMT (Updated: 17 Sep 2021 12:18 AM GMT)

திருவள்ளூர் மாவட்டத்தில் 3 ஆயிரத்து 824 முகாம்கள் மூலம் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்தார்.

திருவள்ளூர், 

திருவள்ளூர் நகராட்சி கா.மு.க சகோதரர்கள் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பாக தேசிய குடற்புழு நீக்க வாரவிழா நடைபெற்றது. இதற்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கி பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அல்பெண்டசோல் என்ற குடற்புழுநீக்க மாத்திரைகளை வழங்கி தானும் அந்த மாத்திரைகளை சாப்பிட்டார்.

அதைத்தொடர்ந்து கலெக்டர் கொரோனா நோய் தடுப்பு விழிப்புணர்வு குறித்து நடைபெற்ற பள்ளி மாணவ-மாணவிகளின் நடன நிகழ்ச்சிகளையும், பள்ளி மாணவ மாணவிகளால் உருவாக்கப்பட்ட விழிப்புணர்வு கண்காட்சிகளையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது;-

திருவள்ளூர் மாவட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பாக தேசிய குடற்புழு நீக்க வாரம் வருகிற 25-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

விடுபட்ட குழந்தைகளுக்கான சிறப்பு முகாம் வருகிற 27-ந்தேதி நடைபெற உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் 1 முதல் 19 வயது வரையுள்ள 6 லட்சத்து 70 ஆயிரத்து 42 குழந்தைகளுக்கும், 20 முதல் 30 வயதுடைய 2 லட்சத்து 68 ஆயிரத்து 135 கருவுறாத தாய்மார்கள் என மொத்தம் 9 லட்சத்து 38 ஆயிரத்து 177 நபர்களுக்கு அல்பெண்டசோல் என்ற குடற்புழுநீக்க மாத்திரைகளை ஒரு டோஸ் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த குடற்புழு நீக்க மாத்திரைகள் 338 துணை சுகாதார மையங்களிலும், 1,822 அங்கன்வாடி மையங்களிலும், 1,664 பள்ளிகளிலும் என 3 ஆயிரத்து 824 முகாம்கள் மூலமாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முகாமில் 532 சுகாதார பணியாளர்களும், 1,803 அங்கன்வாடி பணியாளர்கள் என 2 ஆயிரத்து 335 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 1 முதல் 2 வயது வரையிலான குழந்தைகளுக்கு பாதி அளவு உள்ள அல்பெண்டசோல் மாத்திரையும், 2 வயது முதல் 19 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு முழு அளவிலான அல்பெண்டசோல் மாத்திரையையும் அடுத்த 14 நாட்களில் மாவட்ட நிர்வாகம் மாவட்ட மருத்துவத்துறை சார்பில் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

9 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கு பள்ளிகள் மூலம் மாத்திரைகள் கொடுப்பதற்கும், இதர குழந்தைகளுக்கு வீடு வீடாக சென்று மாத்திரை கொடுப்பதற்கும், கருவுறாத தாய்மார்களின் வீட்டுக்கே சென்று மாத்திரைகள் கொடுப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. குடற்புழுவை பொறுத்தவரை 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் ரத்தசோகையை இந்த அல்பெண்டசோல் மாத்திரை சரி செய்வது முக்கியமான ஒன்றாகும். 2 வாரத்திற்கு கொடுக்கப்படும் இந்த குடற்புழு நீக்க மாத்திரை மேலும் பல்வேறு நோய்களிலிருந்து குழந்தைகள் மற்றும் கருவுறாத தாய்மார்களை காப்பாற்ற வழி வகுக்கும். எனவே திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த தகுதி வாய்ந்த குழந்தைகள் மற்றும் கருவுறாத தாய்மார்களும் இந்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் திருவள்ளூர் சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ஜவகர்லால், திருவள்ளூர் நகராட்சி ஆணையர் சந்தானம் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Next Story