தசரா திருவிழா ஆலோசனை கூட்டம்- உதவி கலெக்டர் தலைமையில் நடந்தது


தசரா திருவிழா ஆலோசனை கூட்டம்- உதவி கலெக்டர் தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 17 Sep 2021 1:22 PM GMT (Updated: 17 Sep 2021 1:22 PM GMT)

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா ஆலோசனை கூட்டம், உதவி கலெக்டர் தலைமையில் நடந்தது.

குலசேகரன்பட்டினம்:
குலசேகரன்பட்டினத்தில் தசரா திருவிழா ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம், உதவி கலெக்டர் கோகிலா தலைமையில் நடந்தது.

ஆலோசனை கூட்டம்

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் பிரசித்தி பெற்ற தசரா திருவிழா அடுத்த மாதம் (அக்டோபர்) 6-ந்தேதி தொடங்கி, 12 நாட்கள் நடைபெறும். 10-ம் திருநாளான 15-ந்தேதி இரவில் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. தசரா திருவிழா ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம், குலசேகரன்பட்டினம் தனியார் மண்டபத்தில் நேற்று நடந்தது.
திருச்செந்தூர் உதவி கலெக்டர் கோகிலா தலைமை தாங்கினார். உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங், அறநிலையத்துறை உதவி ஆணையர் ரோஜாலி சுமதா, கோவில் நிர்வாக அலுவலர் கலைவாணன், தாசில்தார் ராமச்சந்திரன், குலசேகரன்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் தசரா குழு நிர்வாகிகள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் உதவி கலெக்டர் பேசியதாவது:-

உள்ளூரில் விரதம்

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, கடந்த ஆண்டைப் போலவே தசரா திருவிழா எளிமையாக நடைபெறும். பக்தர்கள், தங்களது ஊர்களிலேயே விரதம் இருந்து வேடம் அணிந்து, உள்ளூர்களிலேயே காணிக்கை வசூலித்து, அங்குள்ள கோவில்களில் செலுத்தலாம்.
தசரா திருவிழா கொடியேற்றம் நடந்ததும், ஒவ்வொரு ஊரில் இருந்தும் தசரா குழு நிர்வாகி ஒருவர் மட்டும் குலசேகரன்பட்டினம் கோவிலுக்கு வந்து காப்புகளை வாங்கி சென்று பக்தர்களுக்கு வழங்கலாம். அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி விழா நடைபெறுவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பக்தர்கள் கோரிக்கை

கூட்டத்தில் பங்கேற்ற தசரா குழு நிர்வாகிகள், பக்தர்கள் கூறுகையில், ‘விழா நாட்களில் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்களை அனுமதிக்க வேண்டும். உள்ளூர் பக்தர்கள் எளிதில் குலசேகரன்பட்டினத்துக்கு வந்து செல்ல அனுமதிக்க வேண்டும். கொடியேற்றத்துக்கு பின்னர் ஒவ்வொரு ஊரில் இருந்தும் குறைந்தபட்சம் 5 பேர் காப்புகளை வாங்கி செல்ல அனுமதிக்க வேண்டும்’ என்று தெரிவித்தனர்.
பின்னர் உதவி கலெக்டர் கோகிலா கூறுகையில், ‘பக்தர்களின் கோரிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டரின் கவனத்துக்கு கொண்டு சென்று, தசரா திருவிழா கட்டுப்பாடுகள் குறித்த முழு அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்’ என்றார்.

Next Story