ஆம்னி பஸ்சில் தொங்கிய கயிறில் சிக்கி அடுத்தடுத்து இழுத்துச்செல்லப்பட்ட 3 மோட்டார் சைக்கிள்கள் - போக்குவரத்து போலீஸ்காரர் உள்பட 4 பேர் காயம்


ஆம்னி பஸ்சில் தொங்கிய கயிறில் சிக்கி அடுத்தடுத்து இழுத்துச்செல்லப்பட்ட 3 மோட்டார் சைக்கிள்கள் - போக்குவரத்து போலீஸ்காரர் உள்பட 4 பேர் காயம்
x
தினத்தந்தி 18 Sept 2021 5:43 AM IST (Updated: 18 Sept 2021 5:43 AM IST)
t-max-icont-min-icon

ஆம்னி பஸ்சில் தொங்கிய கயிறில் சிக்கி 3 மோட்டார் சைக்கிள்கள் சாலையில் அடுத்தடுத்து இழுத்துச்செல்லப்பட்டன. இந்த சம்பவத்தில் போக்குவரத்து போலீஸ்காரர் உள்பட 4 பேர் காயம் அடைந்தனர்.

சென்னை,

சென்னை எழும்பூரில் இருந்து மதுரை செல்வதற்காக தனியார் ஆம்னி பஸ் ஒன்று, வால்டாக்ஸ் சாலை நிறுத்தத்தில் இருந்து வேப்பேரி ஈ.வி.கே.சம்பத் சாலை வழியாக நேற்று மாலை வந்தது. அந்த ஆம்னி பஸ்சின் மேற்கூரையில் உடைமைகளை கட்டுவதற்காக வைக்கப்பட்டிருந்த கயிறு காற்றில் ஆடியபடி தொங்கியவாறு வந்தது.

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை கடந்து வந்தபோது, ஆம்னி பஸ்சில் தொங்கிய கயிறு பக்கவாட்டில் சென்றுக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிளில் மாட்டிக்கொண்டது. கயிறின் பிடியில் சிக்கிய மோட்டார் சைக்கிள் தர, தரவென சிறிது தூரம் இழுத்துச்செல்லப்பட்டது. இதையடுத்து அதில் இருந்து கயிறு விலகி மற்றொரு மோட்டார் சைக்கிளை இழுத்துக்கொண்டு சென்றது. கயிறின் பிடி விலகியதால், மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி சாலையில் விழுந்தது. இதில் மோட்டார் சைக்கிள்களை ஓட்டிய 2 பேர் காயம் அடைந்தனர்.

இதற்கிடையே, 3-வதாக காஞ்சீபுரத்தை சேர்ந்த ஜோதிராமலிங்கம் என்பவர் ஓட்டிய மோட்டார் சைக்கிளில் கயிறு மாட்டியது. இதனால் மோட்டார் சைக்கிளில் சாலையில் இழுத்துச்செல்லப்பட்டது. இதில் ஜோதிராமலிங்கம் படுகாயம் அடைந்தார். ஆம்னி பஸ்சில் தொங்கிய கயிறு, ஈ.வி.கே.எஸ்.சம்பத் சாலை சந்திப்பில் போக்குவரத்து போலீசார் அமைத்திருந்த இரும்பு தடுப்பில் மாட்டிக்கொண்டது.

இதனால் போக்குவரத்து போலீசார் அமைத்திருந்த இரும்பு தடுப்பு இழுத்துச்செல்லப்பட்டது. அங்கு போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஆதிசேசனை இழுத்துச்சென்று சாலையில் தள்ளியது. இதற்கிடையில் அதிர்ஷ்டவசமாக கயிறு அறுந்ததால், ஆதிசேசனுக்கு பெரிய ஆபத்து நேரவில்லை. தலையில் காயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் வேப்பேரியில் நேற்று மாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

ஆம்னி பஸ்சில் ஆபத்தான வகையில் தொங்கிய கயிறு, 3 மோட்டார் சைக்கிள்களில் சென்றவர்கள், போக்குவரத்து போலீஸ்காரர் என 4 பேரை காயப்படுத்திய சம்பவம் நேற்று பரபரப்பாக பேசப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக ஆம்னி பஸ்சின் டிரைவர் பரமேஸ்வரன் (வயது 42) என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story