கணவருடன் ஏற்பட்ட தகராறில் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்ட பெண்ணுக்கு சரமாரி அரிவாள் வெட்டு


கணவருடன் ஏற்பட்ட தகராறில் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்ட பெண்ணுக்கு சரமாரி அரிவாள் வெட்டு
x
தினத்தந்தி 18 Sept 2021 9:33 PM IST (Updated: 18 Sept 2021 9:34 PM IST)
t-max-icont-min-icon

தேனி அருகே காப்பகத்தில் தங்க வைக்கப்பட்ட பெண்ணை சரமாரியாக அரிவாளால் வெட்டிய கணவரை போலீசார் கைது செய்தனர்.

தேனி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பு.கிள்ளனூரை சேர்ந்தவர் துரைப்பாண்டியன் (வயது 26). கார் டிரைவர். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இவர் திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தார். அப்போது அங்கு வேலை பார்த்த கொடைக்கானல் அருகே உள்ள பூம்பாறையை சேர்ந்த உமா மகேஸ்வரி (24) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் உமா மகேஸ்வரி கணவருடன் கோபித்து கொண்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆண்டிப்பட்டியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு வந்து விட்டார். இதையடுத்து கடந்த மாதம் துரைப்பாண்டியன் அவரை தேடி வந்து சண்டை போட்டார்.
இதுகுறித்து மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தில் உமா மகேஸ்வரி புகார் செய்தார். அதன்பேரில் சமூக நலத்துறையினர் விசாரித்து உமா மகேஸ்வரியை தற்காலிகமாக தேனி அருகே கொடுவிலார்பட்டியில் உள்ள ஒரு காப்பகத்தில் கடந்த மாதம் 13-ந்தேதி தங்க வைத்தனர். பின்னர் கடந்த மாதம் 29-ந்தேதி காப்பகத்துக்கு வந்த துரைப்பாண்டியன் தனது மனைவியுடன் சேர்ந்து வாழ்வதாக கூறி அவரை அழைத்து சென்றார்.
அரிவாள் வெட்டு
ஆனால் மீண்டும் அவர்களுக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதனால் தனக்கு பாதுகாப்பு கேட்டு உமா மகேஸ்வரி ஆண்டிப்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் உமா மகேஸ்வரியை கடந்த 8&ந்தேதி மீண்டும் கொடுவிலார்பட்டியில் உள்ள காப்பகத்தில் போலீசார் தங்க வைத்தனர். அங்கு அவர் தனது 2 குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று அதிகாலையில் துரைப்பாண்டியன் காப்பகத்துக்கு வந்தார். பின்னர் அவர் காப்பகத்தில் சுவர் ஏறி குதித்து உள்ளே புகுந்து அங்கு இருந்த உமா மகேஸ்வரியிடம் தகராறு செய்தார். அப்போது உமா மகேஸ்வரி வெளியே ஓடிய போது அங்குள்ள அலுவலக அறை முன்பு தடுமாறி விழுந்தார். உடனே துரைப்பாண்டியன் தான் மறைத்து வைத்து இருந்த அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டினார்.
இதில் உமா மகேஸ்வரிக்கு தலை, நெற்றி, கால் போன்ற இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. இந்த சத்தம் கேட்டு காப்பகம் நடத்தி வரும் தீனதயாளன் (60) அங்கு வந்தார். அப்போது அவரையும், அங்கிருந்த சிலரையும் அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்துவிட்டு துரைப்பாண்டியன் தப்பி சென்று விட்டார்.
கைது
இதனிடையே ரத்த வெள்ளத்தில் பலத்த காயங்களுடன் கிடந்த உமா மகேஸ்வரியை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து தீனதயாளன் பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து துரைப்பாண்டியனை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story