மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் இன்ஸ்பெக்டர் உள்பட 10 பேர் படுகாயம்


மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் இன்ஸ்பெக்டர் உள்பட 10 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 18 Sep 2021 7:27 PM GMT (Updated: 18 Sep 2021 7:27 PM GMT)

திருப்பத்தூர் அருகே நடந்த மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் இன்ஸ்பெக்டர் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

திருப்பத்தூர், செப்
திருப்பத்தூர் அருகே நடந்த மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் இன்ஸ்பெக்டர் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
மஞ்சு விரட்டு
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே கல்லல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட என்.மேலையூர் கிராமத்தில் அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி நேற்று மஞ்சுவிரட்டு நடந்தது. இதில் சுமார் 300&க்கும் மேற்பட்ட காளைகள் என்.மேலையூர் கண்மாய் பகுதியில் அவிழ்த்து விடப்பட்டன. 
மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு மாடுகளை பிடித்தனர். அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டதால் இதுகுறித்து தகவல் கிடைத்ததும், திருப்பத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரமகாலிங்கம் மற்றும் போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்றனர். 
இன்ஸ்பெக்டர் படுகாயம்
அப்போது எதிர்பாராதவிதமாக இன்ஸ்பெக்டர் சுந்தரமகாலிங்கம் மீது காளை ஒன்று முட்டியதில் அவர் படுகாயம் அடைந்தார். இதையடுத்து காரைக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மேலும் காளைகளை பிடிக்க முயன்ற 9 பேருக்கும் படுகாயம் ஏற்பட்டது. 
இந்தநிலையில் அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தியதாக கிராம நிர்வாக அலுவலர் கணேஷ் கிருஷ்ணக்குமார் கொடுத்த புகாரின் பேரில், என்.மேலையூரைச் சேர்ந்த சரவணன், ஜெயக்குமார், போஸ், சண்முகநாதன், ராதாகிருஷ்ணன் ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story