2 குழந்தைகளுடன் தாய் தீக்குளிக்க முயற்சி


2 குழந்தைகளுடன் தாய் தீக்குளிக்க முயற்சி
x
தினத்தந்தி 20 Sep 2021 9:17 PM GMT (Updated: 20 Sep 2021 9:17 PM GMT)

வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.4 லட்சம் மோசடி செய்ததால் விருத்தாசலம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் 2 குழந்தைகளுடன் தாய் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

விருத்தாசலம்

ஆவினங்குடி அருகே உள்ள மேலூர் கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம் மகன் ரமேஷ்(வயது 32). டிரைவர். இவரது மனைவி மலர்க்கொடி (31). இவர்களுக்கு ரவிவர்மா(6) என்ற மகனும், ரதிவதனி(2) என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில் ரமேஷின் உறவினர் மூலம் விருத்தாசலம் நாச்சியார்பேட்டையில் உள்ள லட்சுமி என்ற பெண் அறிமுகமாகியுள்ளார். அப்போது லட்சுமி, கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வேலை செய்து வருவதாகவும், மாவட்ட கலெக்டரின் கார் டிரைவர் பணி காலியாக இருப்பதாகவும், பணம் கொடுத்தால் அந்த வேலையை வாங்கித்தருவதாகவும் கூறியுள்ளார். 
இதை உண்மை என்று நம்பிய ரமேஷ், 2 ஆண்டுக்கு முன்பு ரூ.4 லட்சம் கொடுத்தார். சிறிது நாட்களுக்கு பிறகு வேலை கிடைத்துவிட்டதாக கூறி லட்சுமி, பணி ஆணையை ரமேசிடம் வழங்கினார். அதை பெற்றுக்கொண்டு ரமேஷ் மகிழ்ச்சியுடன் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று காண்பித்தார். அதை வாங்கிப்பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். ஏனென்றால் அது போலி பணி நியமன ஆணை என்றும், கலெக்டரின் கார் ஓட்ட டிரைவர் வேலை காலியிடம் இல்லை என்றும் கூறினர். 

குழந்தைகளுடன் தற்கொலை முயற்சி 

இதனால் பணம் கொடுத்து ஏமாற்ற மடைந்த ரமேஷ், லட்சுமியிடம் சென்று பணத்தை கேட்டுள்ளார். ஆனால் அவர் பணம் கொடுக்கவில்லை. இதனால் ரமேஷ் வீட்டை விட்டு வெளியேறி கோயமுத்தூரில் லாரி ஓட்டி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மலர்க்கொடி, லட்சுமியிடம் பணம் கேட்டார். ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்ததோடு கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து புகார் கொடுத்தும் விருத்தாசலம் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. 
இதனால் மனமுடைந்த மலர்க்கொடி, 2 குழந்தைகளுடன் நேற்று விருத்தாசலம் சப்&கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இதில் விரக்தியடைந்த மலர்க்கொடி தன் மீதும், 2 குழந்தைகள் மீதும் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதை பார்த்த போலீசார், ஓடிவந்து மண்எண்ணெய் கேனை பிடுங்கி, அவர்கள் மீது தண்ணீர் ஊற்றினர். 
இதனை தொடர்ந்து புகாரை ஏற்று விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இது பற்றி போலீசார் கூறுகையில், லட்சுமி பலரிடம் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்து உள்ளார். விரைவில் அவரை பிடித்து விடுவோம் என்றனர். இந்த சம்பவத்தால் விருத்தாசலம் சப்&கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story