மத்திய அரசை கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்


மத்திய அரசை கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 21 Sep 2021 2:58 PM GMT (Updated: 21 Sep 2021 2:58 PM GMT)

மத்தியஅரசை கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்,

மத்திய அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை கண்டித்து தஞ்சை ரெயிலடியில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் நேற்று கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாநகர தி.மு.க. செயலாளர் டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் நீலமேகம், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் முத்து.உத்திராபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், மத்திய பா.ஜ.க. அரசு 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்க்கும் முடிவை கைவிட வேண்டும். வேலையில்லா திண்டாட்டத்தை போக்க வேண்டும். நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் வக்கீல் அன்பரசன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மத்தியமாவட்ட செயலாளர் சொக்கா.ரவி, திராவிடர் கழக மாவட்ட தலைவர் அமர்சிங், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கை சேர்ந்த ஜெய்னுலாபுதீன், மனிதநேய மக்கள் கட்சியை சேர்ந்த பாதுஷா, தமிழ்தேசிய முன்னணியை சேர்ந்த முருகேசன், மக்கள் அதிகாரம் அமைப்பின் பொருளாளர் காளியப்பன், மனிதநேய ஜனநாயக கட்சியை சேர்ந்த அப்துல்லா உள்பட பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டு கருப்புக்கொடிகளை ஏந்தி மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

தஞ்சை சீனிவாசபுரத்தில் உள்ள தனது வீட்டின் முன்பு தி.மு.க. உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி. நிர்வாகிகள், தொண்டர்களுடன் கையில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். அப்போது 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோஷங்கள் மத்திய அரசுக்கு எதிராக எழுப்பப்பட்டன.

தஞ்சை கலைஞர் அறிவாலயம் முன்பு மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ. தலைமையில், மாநகர செயலாளர் டி.கே.ஜி. நீலமேகம் எம்.எல்.ஏ. முன்னிலையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. ராமச்சந்திரன், பொதுக்குழு உறுப்பினர் து.செல்வம், மாவட்ட பொருளாளர் அண்ணா உள்பட பலர் கருப்புக்கொடி ஏந்தி மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை மானம்புச்சாவடி சின்ன ஆஸ்பத்திரி முன்பு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் பி.ஜி.ராஜேந்திரன் தலைமையில் நிர்வாகிகள் வல்லம் குணா, ஜேம்ஸ், ஆதிநாராயணன், பீஸ்மாரவி, பிரபாகரன், நாகமுத்து ஆகியோர் முன்னிலையில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

தஞ்சை தெற்கு ஒன்றியம் வல்லம் நகர தி.மு.க. சார்பில் மத்திய அரசை கண்டித்து கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வல்லம் நகர தி.மு.க. செயலாளர் கல்யாணசுந்தரம் மற்றும் தி.மு.க. கூட்டணி கட்சியினர், இளைஞரணியினர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர். திருவையாறை அடுத்த கல்யாணபுரத்தில் ஒன்றியக்குழு தலைவர் அரசாபகரன் தலைமையில் தலைமை செயற்குழு உறுப்பினர் நாகராஜன் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கருப்புக்கொடி ஏந்தியும். சட்டையில் கருப்பு பேட்ஜ் அணிந்தும் கோஷமிட்டனர். இதில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முரளி மற்றும் பலர் கலந்துகொண்டனர். பூதலூர் ஒன்றியம் முல்லக்குடியில் பூதலூர் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் செயலாளர் காந்தி தலைமையில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதேபோல் இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் ராயமுண்டான்பட்டி, வெண்டையம்பட்டி, ஆச்சாம்பட்டி, செங்கிப்பட்டி, திருக்காட்டுப்பள்ளி, பூதலூர், திருச்சென்னம்பூண்டி- பாபநாசம் படுகை, கல்லணை உள்ளிட்ட இடங்களில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய அரசை கண்டித்து திராவிடர் கழக இளைஞரணி சார்பில் தஞ்சை மாதாக்கோட்டை சாலையில் உள்ள பூபதி நினைவு பெரியார் படிப்பகம் முன்பு நேற்றுகாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாநில இளைஞரணி துணைச் செயலாளர் வெற்றிக்குமார் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் குணசேகரன், மாநில கிராம பிரசாரக்குழு அமைப்பாளர் அதிரடி க.அன்பழகன், மாநில கலைத்துறை செயலாளர் சித்தார்த்தன், மாநில பகுத்தறிவு காக துணைத் தலைவர் கோபு.பழனிவேல், தலைமை கழக பேச்சாளர் பெரியார் செல்வன் மற்றும் பலர் கலந்து கொண்டு கருப்புக்கொடி ஏந்தி கோஷங்களை எழுப்பினர்.

Next Story