திருத்தணி அருகே டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்


திருத்தணி அருகே டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 21 Sept 2021 10:05 PM IST (Updated: 21 Sept 2021 10:05 PM IST)
t-max-icont-min-icon

திருத்தணி அருகே டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே நாகலாபுரம் செல்லும் சாலையில் காசிநாதபுரம் கிராமத்தில் 2 டாஸ்மாக் கடைகள் ஒரே இடத்தில் இயங்கி வருகின்றன. இந்த டாஸ்மாக் கடைகளால் பொதுமக்களுக்கு பெரும் இடையூறு ஏற்படுவதாகவும், குடிமகன்களால் பல தொல்லைகள் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டை முன்வைத்து வந்தனர்.

2 டாஸ்மாக் கடைகளையும் அகற்ற வேண்டும் என்று கிராம சபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி அதை அரசுக்கு தெரிவித்தனர். ஆனால் பொதுமக்கள் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் பல ஆண்டுகளாக எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் 300-க்கும் மேற்பட்டோர் இந்த 2 டாஸ்மாக் கடைகளின் முன் நேற்று ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் கிடைத்ததும் திருத்தணி போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர். பொதுமக்களிடம் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்தவித பலனும் அளிக்கவில்லை.

இந்த நிலையில் திருத்தணி தாசில்தார் அந்த பகுதிக்கு சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இன்னும் ஒரு மாதத்தில் அங்கிருக்கும் 2 டாஸ்மாக் கடைகளையும் அகற்றுவதாக உறுதி அளித்தால் நாங்கள் கடந்து செல்கிறோம் என்று பொதுமக்கள் உறுதியாக தெரிவித்தனர்.

இதையடுத்து தாசில்தார் டாஸ்மாக் நிர்வாகத்திடமும், மாவட்ட நிர்வாகத்திடமும் பேசி ஒரு மாதத்தில் அந்த பகுதியில் இருக்கும் 2 டாஸ்மாக் கடைகளை அகற்ற ஆவண செய்கிறோம் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து அந்த பகுதி மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story