புதுக்கோட்டை சிறைக்குள் கைதிக்காக பீடிக்கட்டுகள், தீப்பெட்டிகளை வீசிய 3 பேர் கைது


புதுக்கோட்டை சிறைக்குள் கைதிக்காக பீடிக்கட்டுகள், தீப்பெட்டிகளை வீசிய 3 பேர் கைது
x
தினத்தந்தி 21 Sept 2021 11:37 PM IST (Updated: 21 Sept 2021 11:37 PM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை சிறைக்குள் கைதிக்காக பீடிக்கட்டுகள், தீப்பெட்டிகளை வீசிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுக்கோட்டை:
பீடிக்கட்டுகள்
புதுக்கோட்டை சிறையில் புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த கைதிகள் 350 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் கும்பகோணத்தை சேர்ந்த தனசேகர் (வயது 29) அடைக்கப்பட்டுள்ளார். இவருடைய நண்பர்களான கும்பகோணத்தை சேர்ந்த சந்திரசேகரன் (29), ஜிந்த் (29), வெங்கடேசன் (25) ஆகியோர் நேற்று முன்தினம் தனசேகரை பார்க்க புதுக்கோட்டை சிறைக்கு வந்தனர். 3 பேரும் மனு கொடுத்து கைதி தனசேகரை சந்திக்க அனுமதி கேட்டனர். 
இந்த நிலையில் அவர்களை சிறைக்காவலர்கள் சோதனை செய்கையில் பீடிக்கட்டுகள், தீப்பெட்டிகள் வைத்திருந்ததால் அவற்றை கொண்டு செல்ல அனுமதி மறுத்தனர். இதனால் அவற்றை எடுத்து செல்லாமல் கைதி தனசேகரை 3 பேரும் பார்த்து விட்டு திரும்பி வந்தனர்.
3 பேர் கைது
இந்த நிலையில் சிறையின் வெளியே நின்று 4 பீடிக்கட்டுகளையும், 2 தீப்பெட்டிகளையும் தாளில் வைத்து பொட்டலமிட்டு அவர்கள் அதனை சிறைக்குள் வீசியுள்ளனர். இதனை சிறைக்காவலர்கள் கண்டனர். இதையடுத்து உடனடியாக சந்திரசேகரன், ஜிந்த், வெங்கடேசன் ஆகிய 3 பேரையும் பிடித்து டவுன் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். 
மேலும் பீடிக்கட்டுகள், தீப்பெட்டிகளையும் கைப்பற்றினர். இதுதொடர்பாக டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை ஜாமீனில் விடுவித்தனர்.

Next Story