பெங்களூருவில் கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது: அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீவிபத்து - தாய்-மகள் கருகி சாவு


பெங்களூருவில் கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது: அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீவிபத்து - தாய்-மகள் கருகி சாவு
x
தினத்தந்தி 22 Sept 2021 3:20 AM IST (Updated: 22 Sept 2021 3:20 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் அடுக்குமாடி குடியிருப்பில் சிலிண்டர் வெடித்து சிதறியதில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் தாய்-மகள் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் 5 பேர் பலத்த காயமடைந்தனர்.

பெங்களூரு: பெங்களூருவில் அடுக்குமாடி குடியிருப்பில் சிலிண்டர் வெடித்து சிதறியதில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் தாய்-மகள் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் 5 பேர் பலத்த காயமடைந்தனர்.

அடுக்குமாடி குடியிருப்பில் தீ

பெங்களூரு பேகூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பன்னரகட்டா சாலை தேவரசிக்கனஹள்ளியில் அஸ்ரிதா என்ற பெயரில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பு 4 மாடிகளை கொண்டது ஆகும். இந்த குடியிருப்பில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை 4.30 மணியளவில் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் 2-வது மாடியில் உள்ள ஒரு வீட்டில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு படையினருக்கும், பேகூர் போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். அந்த தகவலின்பேரில் அங்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் அடுக்குமாடி குடியிருப்பில் பிடித்த தீயை அணைக்க நடவடிக்கை எடுத்தனர். ஆனாலும் தீ மளமளவென வேகமாக பரவி 4 மாடிகளுக்கும் எரிந்தது. இதனால் தீயை அணைக்க தீயணைப்பு படையினர் சிரமப்பட்டனர்.

தாய்-மகள் சாவு

ஆனாலும் தீயணைப்பு படையினர் அடுக்குமாடி குடியிருப்பின் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் அடுக்குமாடி குடியிருப்பில் பிடித்த தீ அணைக்கப்பட்டது. இதன்பின்னர் அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்தவர்களை மீட்க தீயணைப்பு படையினர் நடவடிக்கை எடுத்தனர். 

இந்த தீ விபத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் 210-வது அறையில் வசித்து வந்த லட்சுமி தேவி (வயது 82) மற்றும் அவருடைய மகள் பாக்யா ரேகா (59) ஆகிய 2 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். 

மேலும் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 5 பேர் பலத்த தீக்காயம் அடைந்தனர். அவர்களை போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர்களில் 2 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இந்த தீ விபத்து குறித்து அறிந்ததும் சம்பவ இடத்திற்கு உயர் போலீஸ் அதிகாரிகள் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். முதற்கடட விசாரணையில் அடுக்குமாடி குடியிருப்பில் 2-வது மாடியில் ஒரு வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதில் தீ விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். ஆனாலும் அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள வீடுகளுக்கு செல்லும் கியாஸ் குழாயில் வெடிப்பு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கிறார்கள். 

பரபரப்பு

தீ விபத்து நடந்த போது அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசித்த வந்த ஏராளமானோர் வேலை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்காக வெளியே சென்று இருந்ததாக கூறப்படுகிறது. இல்லாவிட்டால் சாவு எண்ணிக்கை இன்னும் அதிகமாகி இருக்கும் என்று அஞ்சப்படுகிறது.

இந்த தீ விபத்தில் 4 மாடிகளில் இருந்த வீடுகள் முற்றிலும் எரிந்து நாசமாகின. அந்த வீடுகளில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களும் எரிந்து உள்ளதாக கூறப்படுகிறது. இந்த தீ விபத்து குறித்து பேகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story