மும்பையில் இருந்து சென்னைக்கு ரூ.2½ லட்சம் செலவு செய்து நாயை விமானத்தில் அழைத்து வந்த பெண்


மும்பையில் இருந்து சென்னைக்கு ரூ.2½ லட்சம் செலவு செய்து நாயை விமானத்தில் அழைத்து வந்த பெண்
x
தினத்தந்தி 22 Sep 2021 11:09 AM GMT (Updated: 22 Sep 2021 11:09 AM GMT)

மும்பையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் ரூ.2½ லட்சம் செலவு செய்து பெண் ஒருவர் நாயை அழைத்து வந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஆலந்தூர், 

நாடு முழுவதும் விமானங்கள் மூலம் நாய், பூனை உள்ளிட்ட வீட்டில் வளர்க்கும் செல்ல வளர்ப்பு பிராணிகளை கொண்டு வர அனுமதி அளிக்கப்படுகிறது. இதற்காக தனிக்கட்டணம் செலுத்த வேண்டும். இந்த நிலையில், கடந்த 15-ந் தேதி காலை 11.55 மணிக்கு மராட்டிய மாநிலம் மும்பையில் இருந்து சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்திற்கு ஏா்-இந்தியா விமானம் வந்தது. அதில், மும்பையை சேர்ந்த பெண் ஒருவர் ‘மால்டீஸ்’ என்ற உயா் ரகத்தை சேர்ந்த நாய் குட்டியை அழைத்து வந்தார்.

தனது செல்ல பிராணியான ‘பிலா’ என்ற பெயர் கொண்ட அந்த நாயை தன்னுடன் இருக்கையில் அமரவைத்து அழைத்து வர அவர் விருப்பப்பட்டதாக தெரிகிறது.

இதற்காக மற்ற பயணிகளுக்கும் எந்தவித இடையுறும் இல்லாமல் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் விமானத்தில் 12 சொகுசு இருக்கைகள் கொண்ட கேபினை பதிவு செய்தார். ஒரு இருக்கைக்கு ரூ.20 ஆயிரம் வீதம் ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் கட்டணம் செலுத்தி இருந்ததாக தெரிகிறது.

மேலும் அவர் தனது செல்ல நாய்க்கு நோய் தொற்று எதுவும் இல்லை, நோய் எதிா்ப்பு தடுப்பூசிகள் அனைத்தும் செலுத்தப்பட்டதற்காக ஆதாரம் உள்ளிட்ட சான்றிதழ்களையும் சமர்பித்து விட்டு தனது நாய்குட்டியுடன் விமானத்தில் இருந்து இறங்கி, வெளியே சென்றாா்.

தான் செல்லமாக வளர்க்கும் செல்லபிராணிக்காக ஆடம்பரமாக செலவு செய்து விமானத்தில் அழைத்து வந்த தகவல் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவியது. இந்த நிலையில் அந்த பெண் பயணி பற்றிய விபரங்களை வெளியிட விமானம் நிறுவனம் மறுத்து விட்டது.

Next Story