சாா்ஜாவில் இருந்து சென்னை வந்த வாலிபர் திடீர் மாயம் - விமான நிலைய போலீசில் தந்தை புகாா்
சாா்ஜாவில் இருந்து சென்னை வந்த வாலிபர் திடீர் மாயமானதால் விமான நிலைய போலீசில் தந்தை புகாா் அளித்தார்.
ஆலந்தூர்,
சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்தவர் ஞானசேகரன். இவருடைய மகன் முத்துசீமான்(வயது 25). கடந்த 2 ஆண்டுகளாக சார்ஜா நாட்டில் தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்த முத்துசீமான், ஒப்பந்த காலம் முடிவடைந்துவிட்டதால் கடந்த 17-ந் தேதி அதிகாலை சார்ஜாவில் இருந்து சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையம் வந்தார். சென்னை வந்ததும் சிவகங்கையில் உள்ள தந்தை ஞானசேகரிடம் போனில் பேசி உள்ளார். ஆனால் அதன்பிறகு அவர் வீடு வந்து சேரவில்லை. அவரது செல்போனும் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டு இருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஞானசேகரன், சென்னை வந்து, விமான நிலைய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார். அதிகாரிகள் 17-ந் தேதி சென்னை வந்த விமான பயணிகளின் விவரங்களை ஆய்வு செய்தபோது முத்துசீமான் விமானத்தில் சென்னை வந்து குடியுரிமை, சுங்க சோதனைகள் மற்றும் கொரோனா பரிசோதனையை முடித்து விட்டு விமான நிலையத்தில் இருந்து வெளியே சென்றுவிட்டதாக தெரிவித்தனர். அதன்பிறகு உறவினர்கள், நண்பர்களிடம் கேட்டும் அவரை பற்றிய தகவல் இல்லாததால் சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய போலீசில் ஞானசேகரன் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விமான நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் முத்துசீமான் விமான நிலையத்தில் இருந்து தனது உடமைகளை எடுத்துக்கொண்டு வெளியே செல்வது வரை பதிவாகி இருந்தது.
எனவே விமான நிலையத்தில் எந்த பிரச்சினையும் இல்லாமல் வெளியே சென்றுவிட்டார் என்பது உறுதியானதால் சென்னை புறநகரில் உள்ள மற்ற போலீஸ் நிலையங்களுக்கு இதுபற்றி தகவல் கொடுத்து மாயமான முத்துசீமானை போலீசார் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story