பாகிஸ்தானுக்கு உளவு பார்த்து கைதான வியாபாரி, ராணுவ நண்பர்களிடம் புகைப்படங்களை பெற்றது அம்பலம்
இந்திய ராணுவ ரகசியங்களை பாகிஸ்தான் உளவு பிரிவுக்கு அனுப்பியதாக கைதான வியாபாரி, ராணுவத்தில் பணியாற்றும் தனது நண்பர்களிடம் இருந்து புகைப்படங்களை அனுப்பி வைத்திருந்தது அம்பலமாகி உள்ளது.
பெங்களூரு: இந்திய ராணுவ ரகசியங்களை பாகிஸ்தான் உளவு பிரிவுக்கு அனுப்பியதாக கைதான வியாபாரி, ராணுவத்தில் பணியாற்றும் தனது நண்பர்களிடம் இருந்து புகைப்படங்களை அனுப்பி வைத்திருந்தது அம்பலமாகி உள்ளது.
துணி வியாபாரி கைது
இந்திய ராணுவம் சம்பந்தப்பட்ட ரகசிய தகவல்கள் மற்றும் புகைப்படங்களை பாகிஸ்தானின் உளவு பிரிவு (ஐ.எஸ்.ஐ) அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்திருந்ததாக ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஜிதேந்தர் சிங் பெங்களூருவில் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு இருந்தார். இந்திய ராணுவ அதிகாரிகள் கொடுத்த தகவலின் பேரில் பெங்களூரு காட்டன் பேட்டையில் வசித்து வந்ததுடன், துணி வியாபாரம் செய்து வந்திருந்த அவர் கைது செய்யப்பட்டு இருந்தார்.
அவரை 12 நாட்கள் காவலில் எடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஒரு இளம்பெண் முகநூல் மூலமாக ஜிதேந்தர் சிங்குக்கு பழக்கமாகி இருந்ததும், ஹனிடிராப் முறையில் இளம்பெண் விரித்த வலையில் சிக்கி, இந்திய ராணுவ ரகசியங்களை பாகிஸ்தான் உளவு பிரிவுக்கு அவர் அனுப்பி வைத்திருந்ததும் தெரியவந்திருந்தது.
ராணுவத்தில் சேர முயற்சி
இந்த நிலையில், ஜிதேந்தர் சிங்கிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மேலும் பல தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது ஜிதேந்தர் சிங் ராணுவத்தில் சேருவதற்கு பல முறை முயற்சித்துள்ளார். ஆனால் அவரால் ராணுவத்தில் சேர முடியவில்லை. இதன் காரணமாக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பெங்களூருவுக்கு வியாபாரத்திற்காக வந்திருக்கிறார். ராணுவத்தில் சேரும் ஆசையில் இருந்த அவர், ராணுவ வீரர்கள் அணியும் உடையை அணிந்து புகைப்படம் எடுத்து, அதனை தனது முகநூலில் வெளியிட்டு இருந்தார்.
இதனால் ஜிதேந்தர் சிங் ராணுவ வீரர் என நினைத்து, அவரிடம் இருந்து பாகிஸ்தான் இளம்பெண் தகவல்களை பெற திட்டமிட்டு கேட்டுள்ளார்.
இளம்பெண் கேட்டதால் ராணுவத்தில் பணிபுரியும் தனது நண்பர்கள் வேலை செய்யும் பகுதியை தனக்கு புகைப்படங்கள் எடுத்து அனுப்பும்படி ஜிதேந்தர் சிங் கேட்டுள்ளார். அதன்படி, அவர்களும் அனுப்பி வைத்துள்ளனர். நண்பர்களிடம் இருந்து ராணுவம் பற்றிய தகவல்களை கேட்டுஅறிந்து, அந்த ரகசிய தகவல்களையும், ராணுவ முகாம்கள் சம்பந்தப்பட்ட புகைப்படங்களையும் பாகிஸ்தான் உளவுபிரிவுக்கு அவர் அனுப்பி வைத்திருந்தது தெரியவந்துள்ளது. இதற்காக பணம் எதுவும் பெற்றாரா? என்பது குறித்தும் ஜிதேந்தரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story