கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 3286 உள்ளாட்சி பதவிகளுக்கு 10715 வேட்பாளர்கள் போட்டி


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 3286 உள்ளாட்சி பதவிகளுக்கு 10715 வேட்பாளர்கள் போட்டி
x
தினத்தந்தி 26 Sep 2021 4:49 PM GMT (Updated: 26 Sep 2021 4:49 PM GMT)

நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 3,286 பதவிகளுக்கு 10,715 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 487 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்

கள்ளக்குறிச்சி

10,715 வேட்பாளர்கள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 9 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 19 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 180 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 412 கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள், 3,162 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய உள்ளாட்சி பதவிகளுக்கு அடுத்த மாதம் 6 மற்றும் 9-ந் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 15-ந் தேதி தொடங்கி 22-ந் தேதி வரை நடைபெற்றது. 23-ந் தேதி தேதி வேட்புமனு பரிசீலனையும், நேற்று முன்தினம் மாலை 3 மணிவரை மனுக்கள் வாபஸ் பெற கால அவகாசம் வழங்கப்பட்டது. இதன் பின்னர் தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்டது. 
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 3,773 உள்ளாட்சி பதவிகளில் 487 பதவிகளுக்கு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதியுள்ள 3,286 பதவிகளுக்கு 10,715 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதுபற்றிய விவரம் வருமாறு:-

மாவட்ட, ஒன்றிய கவுன்சிலர்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 19 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 167 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இதில் 11 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 39 பேர் மனுக்களை வாபஸ் பெற்றனர். 2 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதி உள்ள 17 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 115 பேர் போட்டியிடுகின்றனர். 
அதேபால் 180 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 1,213 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இதில் 76 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 380 பேர் மனுக்கள் வாபஸ் பெற்றுக்கொண்டனர். 3 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள 177 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 754 பேர் போட்டியிடுகின்றனர். 

ஊராட்சி மன்ற தலைவர்

மாவட்டத்தில் 412 கிராம ஊராட்சி மன்ற தலைவர் பதவிகளுக்கு 2,244 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இதில் 56 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 772 பேர் மனுக்களை வாபஸ் பெற்றுக்கொண்டனர். கள்ளக்குறிச்சி ஒன்றியத்தில் 5 பேர், சங்கராபுரம் ஒன்றியத்தில் 4 பேர், ரிஷிவந்தியம் மற்றும் திருக்கோவிலூர் ஒன்றியங்களில் தலா 5 பேர், சின்னசேலம், உளுந்தூர்பேட்டை, திருநாவலூர் ஆகிய ஒன்றியங்களில் தலா 2 பேர், கல்வராயன்மலை ஒன்றியத்தில் ஒருவர், தியாகதுருகம் ஒன்றியத்தில் 3 பேர் என மொத்தம் 29 கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள 383 கிராம ஊராட்சி மன்ற தலைவர் பதவிகளுக்கு 1,387 பேர் போட்டியிடுகின்றனர். 

அதேபோல் 3,162 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 10,333 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இதில் 81 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 1,340 பேர் மனுக்களை வாபஸ் பெற்றனர். 453 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள 2,709 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 8,459 பேர் போட்டியிடுகின்றனர். 
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மொத்தமுள்ள 3,773 உள்ளாட்சி பதவிகளில் 487 பதவிகளுக்கு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதை அடுத்து மீதியுள்ள 3,286 பதவிகளுக்கு 10,715 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.



Next Story