கடலூர் மாவட்டத்தில் 927 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்


கடலூர் மாவட்டத்தில் 927 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 26 Sep 2021 5:08 PM GMT (Updated: 26 Sep 2021 5:08 PM GMT)

கடலூர் மாவட்டத்தில் 927 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. இதை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கடலூர், 

கடலூர் மாவட்டத்தில் கொரோனா 3-வது அலை பரவலை தடுக்க ஏற்கனவே 2 மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு, நிர்ணயித்த இலக்கில் தடுப்பூசி செலுத்தப்பட்டது. நேற்று 3-வது மாபெரும் தடுப்பூசி முகாம் மாவட்டம் முழுவதும் நடந்தது.

இதற்காக கடலூர் மாவட்டத்தில் ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சி பகுதிகளில் உள்ள கிராம ஊராட்சி அலுவலகங்கள், வருவாய் ஆய்வாளர் அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்கள், பேரூராட்சி அலுவலகங்கள், பஸ் நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்கள், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகிய இடங்களில் 927 தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது.

கலெக்டர் ஆய்வு

இந்த மையங்களில் காலை 7 மணிக்கு தொடங்கிய தடுப்பூசி முகாம் இரவு 7 மணி வரை நடந்தது. இந்த முகாமை நெல்லிக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட ஒரு மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி, அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பண்ருட்டி வட்டம் மேல்பட்டாம்பாக்கம் அரசு உயர்நிலை பள்ளி, அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மாளிகைமேடு கிராம சேவை மையம் ஆகிய இடங்களில் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது, தடுப்பூசி கையிருப்பு குறித்தும், தடுப்பூசி முகாமில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்தும் ஆய்வு செய்தார். ஆனால் பெரும்பாலான முகாம்களில் கோவிஷீல்டு தடுப்பூசி மட்டும் செலுத்தப்பட்டது. கோவாக்சின் தடுப்பூசி இருப்பு இல்லை. இதனால் கோவாக்சின் தடுப்பூசி போட வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றதை பார்க்க முடிந்தது.

மேலும் 9 லட்சம் பேருக்கு...

ஆய்வின் போது கலெக்டர் பாலசுப்ரமணியம் நிருபர்களிடம் கூறுகையில், தற்போது நடக்கும் முகாமில் ஒரு லட்சத்து 22 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடுவதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது. 

மேலும் கடலூர் மாவட்டத்தில் இதுவரை 12 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட்டுள்ளனர். மீதமுள்ள 9 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

 அப்போது,  சுகாதார பணிகள் இணை இயக்குனர் டாக்டர் மீரா, மலேரியா அலுவலர் கஜபதி, நெல்லிக்குப்பம் நகராட்சி கமிஷனர் பார்த்தசாரதி, பொறியாளர் பொறுப்பு வாசு, துப்புரவு அலுவலர் சக்திவேல் மற்றும் தாசில்தார்கள், மருத்துவ அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், டாக்டர்கள், செவிலியர்கள், சுய உதவி குழுவினர், அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.





Next Story