புதுக்கோட்டையில் கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு


புதுக்கோட்டையில் கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
x
தினத்தந்தி 28 Sept 2021 1:00 AM IST (Updated: 28 Sept 2021 1:00 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டையில் கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை:
தீக்குளிக்க முயற்சி
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே கொடும்பாளூர் பகுதியை சேர்ந்த செல்வத்தின் மனைவி அழகம்மாள். இவரது கணவர் இறந்துவிட்டார். இந்த நிலையில் அழகம்மாள் தனது 2 ஆண் குழந்தைகளுடன் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அவர் கலெக்டர் அலுவலகத்தின் நுழைவுவாயில் முன்பு திடீரென தனது உடலில் கேனில் கொண்டு வந்த மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். 
இதனை கண்ட ஊர்க்காவல்படை பெண்கள் சுமதி, இலக்கியா ஆகியோர் விரைந்து சென்று அழகம்மாளின் கைகளை பிடித்து தடுத்து நிறுத்தினர். மேலும் அவர் வைத்திருந்த மண்எண்ணெய் கேன், தீப்பெட்டியை பறிமுதல் செய்தனர். அவர் மீது அங்கிருந்தவர்கள் தண்ணீரை ஊற்றினர்.
பலத்த சோதனை
அழகம்மாள் கண்ணீர் விட்டு அழுதபடி எனக்கு யாரும் உதவி செய்வதில்லை என புலம்பியபடி கூறினார். அவரை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் வேனில் திருக்கோகர்ணம் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். 
இதில் தனது இடத்திற்கு பட்டா இல்லை எனவும், தற்போது கணவர் இறந்த பின் அனைவரும் தன்னிடம் பிரச்சினை செய்வதாகவும், இது தொடர்பாக போலீஸ் மற்றும் அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், அதனால் வாழ வழியின்றி தற்கொலை செய்ய வந்ததாக கூறினார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். மண்எண்ணெய் கேனுடன் வந்து தீக்குளிக்க முயன்ற பெண்ணால் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்திற்கு பின் மனு கொடுக்க வந்த அனைவரையும் போலீசார் பலத்த சோதனை செய்து அனுப்பினர்.

Next Story