வாக்காளர்களுக்கு வழங்க மதுபானங்களை மொத்தமாக கொள்முதல் செய்தால் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா எச்சரிக்கை


வாக்காளர்களுக்கு வழங்க மதுபானங்களை மொத்தமாக கொள்முதல் செய்தால் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா எச்சரிக்கை
x
தினத்தந்தி 28 Sep 2021 4:41 PM GMT (Updated: 28 Sep 2021 4:41 PM GMT)

விழுப்புரம் மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு வழங்க மதுபானங்களை மொத்தமாக கொள்முதல் செய்தால் குண்டர் சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

விழுப்புரம், 

விழுப்புரம் ஆயுதப்படை வளாகத்தில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம் விடப்படுவதை நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா பார்வையிட்டார். அதன் பின்னர் அவர், நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

உள்ளாட்சி தேர்தலையொட்டி புதுச்சேரி மாநிலத்தில் இருந்து மதுபானங்கள் தமிழகத்திற்கு கடத்தப்படுவதால் விழுப்புரம் மாவட்ட எல்லையான 9 இடங்களில் மதுபான கடத்தலை தடுக்கும் விதமாக சுழற்சி முறையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

இப்பணியில் மதுவிலக்கு அமல்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் 65 போலீசார் மற்றும் 5 தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை

மேலும் அரசியல் கட்சி வேட்பாளர்கள், மதுபாட்டில்களை மொத்தமாக கொள்முதல் செய்து வாக்காளர்களுக்கு வினியோகம் செய்தாலும், மதுபானங்களை கடத்தினாலும் அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்படும்.

விழுப்புரம் மாவட்டத்தில் 590 பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ளதால் அதனை கண்காணிக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கூடுதலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக 25 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 இவ்வாறு அவர் கூறினார்.

Next Story