கன்னித்தன்மையை பரிசோதிக்க கூறி பெண் என்ஜினீயருக்கு தொல்லை


கன்னித்தன்மையை பரிசோதிக்க கூறி பெண் என்ஜினீயருக்கு தொல்லை
x
தினத்தந்தி 2 Oct 2021 8:54 PM GMT (Updated: 2 Oct 2021 9:03 PM GMT)

பெங்களூருவில், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதுடன் கன்னித்தன்மையை பரிசோதிக்க கூறி பெண் என்ஜினீயருக்கு தொல்லை கொடுத்த கணவர் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

பெங்களூரு,

பெங்களூரு அனுமந்தநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் 29 வயது இளம்பெண். சாப்ட்வேர் என்ஜினீயரான இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இளம்பெண்ணுக்கும், ஞானபாரதியை சேர்ந்த தீபக் என்பவருக்கும் கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் திருமணம் நடந்து இருந்தது. திருமணம் முடிந்த புதிதில் தீபக்கும், இளம்பெண்ணும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக தீபக், இளம்பெண்ணிடம் கூடுதலாக வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் கூடுதல் வரதட்சணை வாங்கி வர அவர் மறுத்து விட்டார். ஆனாலும் வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை தீபக், அவரது தந்தை கெம்பனராசிமய்யா, தீபக்கின் சகோதரர் ரக்‌ஷக், சகோதரி அனிதா, தீபக்கின் அத்தை ஹேமா ஆகியோர் கொடுமைப்படுத்தி வந்ததாக தெரிகிறது.

மேலும் தீபக்கும், ஹேமாவும் இளம்பெண்ணிடம் உனது நடத்தையில் எங்களுக்கு சந்தேகம் உள்ளது என்று கூறியதுடன், ஆஸ்பத்திரிக்கு சென்று கன்னித்தன்மை பரிசோதனை செய்து அறிக்கையை தங்களிடம் தர வேண்டும் என்றும் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது. மேலும் தீபக்கின் தந்தை கெம்பனராசிமய்யா, இளம்பெண்ணிடம் தனது ஆசைக்கு இணங்க வேண்டும் என்று வற்புறுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து இளம்பெண், தீபக்கிடம் கூறிய போது அவர் தனது தந்தையுடன் மட்டும் இன்றி தனது நண்பரான சதீஷ் என்பவருடனும் நீ நெருக்கமாக இருக்க வேண்டும் என்று வற்புறுத்தியதாக தெரிகிறது. இதனால் மனம் உடைந்த இளம்பெண் தீபக், கெம்பனராசிமய்யா, ரக்‌ஷக், அனிதா, ஹேமா ஆகியோர் மீது அனுமந்தநகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் தீபக் உள்பட 5 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அவர்களை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.

Next Story