கடலூர் பகுதியில் தொடர் மழை: அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதம் விவசாயிகள் கவலை


கடலூர் பகுதியில் தொடர் மழை: அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதம் விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 7 Oct 2021 10:07 PM IST (Updated: 7 Oct 2021 10:07 PM IST)
t-max-icont-min-icon

கடலூர் பகுதியில் பெய்த தொடர் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

நெல்லிக்குப்பம், 

சம்பா சாகுபடி

கடலூர் அருகே ரெட்டிச்சாவடி, திருப்பணாம்பக்கம், தூக்கணாம்பாக்கம், வெள்ளப்பாக்கம், நெல்லிக்குப்பம், உச்சிமேடு, கீழ்குமாரமங்கலம், விநாயகபுரம், குமரப்பன் ரெட்டிசாவடி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 500-க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் சம்பா நெல் சாகுபடி செய்து பராமரித்து வந்தனர். தற்போது நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்தது.

நெற்பயிர்கள் அழுகின

இந்தநிலையில் கடந்த சில நாட்களாக கடலூர் பகுதியில் இடி-மின்னலுடன் பெய்த தொடர் மழையால் உச்சிமேடு, கீழ்குமாரமங்கலம், விநாயகபுரம், குமரப்பன் ரெட்டிசாவடி ஆகிய கிராமங்களில் 50 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு, அறுவடைக்கு தயாராக இருந்த நெய்பயிர்கள் சாய்ந்து மழைநீரில் மூழ்கி அழுகின. ஆயிரக்கணக்கான ரூபாய் செலவு செய்து சம்பா சாகுபடி செய்த விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

பெரும் நஷ்டம்

இதுகுறித்து உச்சிமேடு கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் கூறுகையில், கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்த தொடர் மழையால் 50 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்து அறுவடைக்கு தயாராக இருந்த நெற் பயிர்கள் அனைத்தும் மழையில் நனைந்து வீணாகி உள்ளது. இதனால் என்னை போன்ற பல விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே அரசு அதிகாரிகள் மழையால் பாதிக்கப்பட்ட நெல் வயல்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கிறோம் என்றார்.

Next Story