தேர்தல் பணி முடிந்து கணவருடன் வந்த ஆசிரியைக்கு கத்திக்குத்து


தேர்தல் பணி முடிந்து கணவருடன் வந்த ஆசிரியைக்கு கத்திக்குத்து
x
தினத்தந்தி 7 Oct 2021 4:52 PM GMT (Updated: 7 Oct 2021 4:52 PM GMT)

தேர்தல் பணி முடிந்து அதிகாலையில் கணவருடன் மோட்டார் சைக்கிளில் திரும்பிய போது வழிப்பறி முயற்சியில் ஆசிரியை கத்தியால் குத்தப்பட்டார்.

வில்லியனூர், அக்.
வில்லியனூர் அருகே தேர்தல் பணி முடிந்து அதிகாலையில் கணவருடன் மோட்டார் சைக்கிளில் திரும்பிய போது வழிப்பறி முயற்சியில் ஆசிரியை கத்தியால் குத்தப்பட்டார்.
வழிமறித்தனர்
புதுவை மாநிலம் அருகே தமிழக பகுதியான விழுப்புரம் மாவட்டம் புதுக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். இவரது மனைவி தென்கோடி பாரதி (வயது 35). இவர் திருக்கனூர் அருகே உள்ள சிதலம்பட்டு அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
நேற்று முன்தினம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பணியாற்றிவிட்டு நள்ளிரவு பணி முடிந்து அதிகாலை 2 மணி அளவில் தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில் புதுவை நோக்கி வந்து கொண்டிருந்தார்.
திருக்கனூர் அருகே உள்ள கூனிமுடக்கு பகுதியில் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்பி விட்டு புறப்பட்ட போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் திடீரென்று அவர்களை வழிமறித்தனர்.
கத்திக்குத்து
இதனால் அதிர்ச்சியடைந்த சண்முகசுந்தரம் தனது மோட்டார் சைக்கிளை திருப்பி வேகமாக செல்ல முயன்றார். அப்போது மர்ம ஆசாமிகள் கத்தியால் குத்தியதில் ஆசிரியை தென்கோடி பாரதியின் முதுகில் காயம் ஏற்பட்டதாக தெரிகிறது.
ஆனால் அதன்பிறகும் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் ஓட்டிச் சென்று அந்த ஆசாமிகளிடம் இருந்து சண்முகசுந்தரம் தப்பினார். அதன்பின் அந்த ஆசாமிகள் அங்கிருந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றதாக தெரிகிறது. 
இந்தநிலையில் காயமடைந்த தென்கோடி பாரதி சித்தேரி தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  
இதுகுறித்து வில்லியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறி செய்யும் நோக்கத்துடன் ஆசிரியையை கத்தியால் குத்திய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story