4 மாடுகள் மர்ம சாவு
விவசாயிக்கு சொந்தமான 4 மாடுகள் மர்மமான முறையில் செத்தன.
வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, அன்னமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட முகமதுபட்டினம் காட்டுக்கொட்டகையில் வசிப்பவர் ராமர்(வயது 39). விவசாயியான இவர் மாடுகள் வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை வீட்டின் அருகே கட்டியிருந்த 4 மாடுகளில் 2 பசுமாடுகள், ஒரு காளை மாடு திடீரென்று அடுத்தடுத்து கீழே விழுந்து பரிதாபமாக செத்தன. ஒரு பசு மாடு உயிருக்கு போராடியது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ராமர் உடனடியாக அருகே உள்ள கால்நடை மருத்துவரை அழைத்து வந்தார். அவர் உயிருக்கு போராடிய மாட்டிற்கு சிகிச்சை அளித்தார். இருப்பினும் நேற்று அதிகாலை அந்த பசுமாடும் செத்தது. முன்னதாக அந்த மாடுகள் இரையாக தீவன சோளம் தின்றதாக கூறப்படுகிறது. விவசாயியின் 4 மாடுகள் மர்மமான முறையில் செத்தது, அந்த பகுதி விவசாயிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி ராமர் கூறுகையில், இந்த மாடுகளை வைத்து பிழைப்பு நடத்தி வந்தோம். தற்போது மாடுகள் செத்ததால் எங்கள் குடும்பத்திற்கு வருமானத்திற்கு வேறு வழியில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் செத்த மாடுகளுக்கு உரிய இழப்பீட்டை அரசிடம் இருந்து பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.
Related Tags :
Next Story