விருத்தாசலம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.2¼ லட்சம் நகை-பணம் கொள்ளை மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


விருத்தாசலம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.2¼ லட்சம் நகை-பணம் கொள்ளை மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 9 Oct 2021 10:27 PM IST (Updated: 9 Oct 2021 10:27 PM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.2¼ லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கம்மாபுரம், 

கடன் வாங்கி...

விருத்தாசலம் அருகே உள்ள சொட்டவனம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் கணேசன் மகன் வெற்றிவேல் (வயது 40). இவர் வீட்டுமனை வாங்கி புதிதாக வீடு கட்டுவதற்காக ரூ.2 லட்சம் கடன் வாங்கி வீட்டில் வைத்திருந்தார். நேற்று முன்தினம் காலை வெற்றிவேல் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் பின்னலூரில் உள்ள தனது மாமனார் வீட்டுக்கு சென்று விட்டு, நேற்று காலை வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு, திறந்து கிடந்தது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த வெற்றிவேல் மற்றும் அவருடைய குடும்பத்தினர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வீடு கட்ட வைத்திருந்த ரூ.2 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் 4 கிராம் தங்கம், 2 ஜோடி வெள்ளி கொலுசுகளை காணவில்லை.

நகை-பணம் கொள்ளை

வெற்றிவேல் குடும்பத்துடன் வெளியூர் சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து ரூ.2¼ லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது. மேலும் கொள்ளையர்கள் கொண்டு வந்த டார்ச்லைட் ஒன்றும் வீட்டில் கிடந்தது. உடனே இதுபற்றி வெற்றிவேல் கம்மாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்கள் விட்டு சென்ற டார்ச்லைட்டை கைப்பற்றி, விசாரணை நடத்தி வருவதோடு, நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த கொள்ளை சம்பவம் அக்கிராம மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story