சாமி சிலைகளை உடைத்தவர் மனநல பரிசோதனைக்கு பின் சிறையில் அடைப்பு
சாமி சிலைகளை உடைத்தவர் மனநல பரிசோதனைக்கு பின் சிறையில் அடைக்கப்பட்டார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலின் உபகோவிலான பெரியசாமி, செங்கமலையார் கோவில்களில் சாமி சிலைகளையும், சிறுவாச்சூர் பெரியாண்டவர் கோவில் சாமி சிலைகளையும், சிறுவாச்சூர் அம்பாள் நகரில் சித்தர்கள் கோவில் சாமி சிலைகளையும் உடைத்ததாக கடலூர் மாவட்டம், காட்டுமன்னார் கோவில் தாலுகா, சிதம்பரம் அருகே கால்நாட்டான்புலியூரை சேர்ந்தவரும், தற்போது சென்னையில் வசித்து வருபவரான நடராஜன் என்ற நாதனை (வயது 42) பெரம்பலூர் போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். பின்னர் அவரை இரவில் சிறையில் அடைப்பதற்காக பெரம்பலூர் மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண்-1 நீதிபதியின் முன்பு ஆஜர்படுத்தினர். அப்போது நாதன் மனநலம் பாதிக்கப்பட்டது போல் இருந்ததால், நீதிபதி அவருடைய மனநலத்தை மருத்துவமனையில் பரிசோதித்து டாக்டரிடம் சான்று பெற்று வருமாறு போலீசாருக்கு உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து நாதன் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நாதனுக்கு சிகிச்சை மேற்கொண்ட டாக்டர், அவர் மனநலம் பாதிக்கப்படவில்லை என்று சான்று அளித்தார். இதையடுத்து நாதனை நேற்று குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண்-2 நீதிபதி முன்னிலையில் போலீசார் ஆஜர்படுத்தி, மருத்துவ சான்றினை காண்பித்தனர். பின்னர் நீதிபதி நீதிமன்ற காவலில் நாதனை அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து நாதன் பெரம்பலூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் சிறுவாச்சூர் பெரியசாமி மலைக்கோவிலில் சாமி சிலைகள் உடைக்கப்பட்டிருந்ததை பா.ஜ.க.வின் மாநில துணைத் தலைவர் அஷ்வத்தாமன் நேற்று கட்சியினருடன் நேரில் சென்று பார்வையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story