கொன்று புதைக்கப்பட்ட தொழிலாளி உடல் தோண்டி எடுப்பு


கொன்று புதைக்கப்பட்ட தொழிலாளி உடல் தோண்டி எடுப்பு
x
தினத்தந்தி 12 Oct 2021 12:01 AM IST (Updated: 12 Oct 2021 12:01 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை அருகே கொன்று புதைக்கப்பட்ட தொழிலாளி உடல் தோண்டி எடுக்கப்பட்டது. இதுதொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை:
நெல்லை அருகே கொன்று புதைக்கப்பட்ட தொழிலாளி உடல் தோண்டி எடுக்கப்பட்டது. இதுதொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

பூக்கட்டும் தொழிலாளி

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே சிவகாமிபுரத்தைச் சேர்ந்தவர் முருகேசன், பூ வியாபாரி. இவருடைய மகன் ஜெகதீஷ் (வயது 23). பூக்கட்டும் தொழிலாளியான இவர் கடந்த 5-ந்தேதி மாயமானார். இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் உத்தரவின்பேரில், போலீசார் தனிப்படை அமைத்து, மாயமான ஜெகதீசை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஜெகதீசின் நண்பர்களிடம் விசாரித்தபோது, அவர் கொலை செய்யப்பட்ட பரபரப்பு தகவல் ெதரியவந்தது. 

அடித்துக்கொலை

சமீபத்தில் சிவகாமிபுரத்தில் நடந்த கோவில் விழாவில் சிலருக்கு இடையே வாக்குவாதம், கைகலப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக ஜெகதீசுக்கும், சிலருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது.

இந்த நிலையில் ஜெகதீசை சிலர் மது குடிக்க அழைத்து சென்று அடித்துக் கொலை செய்து உள்ளனர். பின்னர் அவரது உடலை காரில் ஏற்றிச்சென்று, நெல்லை- நாகர்கோவில் ரோடு டக்கரம்மாள்புரம் பகுதியில் ஒதுக்குப்புறமான இடத்தில் புதைத்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

உடல் தோண்டி எடுப்பு

ஜெகதீஷ் உடல் புதைக்கப்பட்ட இடத்தை நேற்று முன்தினம் இரவில் நெல்லை மேலப்பாளையம் மற்றும் பாவூர்சத்திரம் போலீசார் பார்வையிட்டனர். பின்னர் நேற்று மாலையில் பாளையங்கோட்டை தாசில்தார் ஆவுடையப்பன், மேலப்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில், ஜெகதீசின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது.

அப்போது அவரது உடல் அழுகிய நிலையில் இருந்தது. அதை பார்த்து குடும்பத்தினர் கண்ணீர்மல்க அடையாளம் காட்டினர். பின்னர் அவரது உடலை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி டாக்டர் பிரசன்னா தலைமையிலான மருத்துவ குழுவினர் அங்கேயே பரிசோதனை செய்து குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். தடயவியல் நிபுணர் கலாவதி தடயங்களை சேகரித்தார்.
அப்போது ஆலங்குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்னி வளவன், இன்ஸ்பெக்டர்கள் முத்து சுப்பிரமணியன் (மேலப்பாளையம்), சுரேஷ் (பாவூர்சத்திரம்) மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

வாலிபர் கைது

இதற்கிடையே ஜெகதீஷ் கொலை வழக்கு தொடர்பாக, நெல்லை டக்கரம்மாள்புரம் விவேகானந்தர் காலனியைச் சேர்ந்த சுந்தர்ராஜ் மகன் ஜோயல் (33) மேலப்பாளையம் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரை பாவூர்சத்திரம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக, ஜெகதீஷ் உடல் புதைக்கப்பட்ட இடத்தை ஜோயல் அடையாளம் காட்டினார். அங்கு ஜெகதீஷ் உடலை புதைப்பதற்கு அவர் உதவி இருப்பதாக போலீசார் பரபரப்பு தகவலை தெரிவித்தனர். இந்த கொலையில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி உள்ளிட்ட மேலும் சிலரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 

நெல்லை அருகே கொன்று புதைக்கப்பட்ட தொழிலாளி உடல் தோண்டி எடுக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story