மனைவியை மீட்டுதரக்கோரி லாரி டிரைவர் 3 குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு


மனைவியை மீட்டுதரக்கோரி லாரி டிரைவர் 3 குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
x
தினத்தந்தி 11 Oct 2021 7:34 PM GMT (Updated: 11 Oct 2021 7:34 PM GMT)

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் லாரி டிரைவர் குடும்பத்துடன் தீ குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது..

திருச்சி, அக்.12-
திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் லாரி டிரைவர் குடும்பத்துடன் தீ குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது..
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சிவராசு தலைமையில் நடைபெற்றது. இதில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை மனுவாக கலெக்டரிடம் கொடுத்தனர்.
இதேபோல் லாரி டிரைவரான முசிறி தண்டலை பகுதியை சேர்ந்த பெரியசாமி (வயது 40)  2 மகள், ஒரு மகன் ஆகியோரை அழைத்துக்கொண்டு  மனு கொடுக்க வந்து இருந்தார்.
தீக்குளிக்க முயற்சி
 இந்தநிலையில் திடீரென்று அவர் தான் மறைத்து வைத்திருந்த 5 லிட்டர் மண்எண்ணெய் கேனை எடுத்து குடும்பத்தினர் மீதும், தனது மீது ஊற்றி தீ குளிக்க முயன்றார். இதனை பார்த்த போலீசார் மற்றும் ெபாதுமக்கள் பெரியசாமியிடம் இருந்த மண்எண்ெணய் கேனை பிடுங்கினர். மேலும் அவர்கள் மீது தண்ணீர் ஊற்றினர்.
பின்னர் அவரிடம் விசாரணை நடத்தினர் அப்போது அவர் கூறும்போது, எனது மனைவி சுதாவை (35) துறையூரை சேர்ந்த அரசு போக்குவரத்து கழக ஊழியர் கடத்தி சென்றுவிட்டார். மீட்டு தரக்கோரி முசிறி போலீசில் புகார் செய்தும், நடவடிக்கை எடுக்காததால் குழந்தைகளுடன் வந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பாக  கலெக்டர் சிவராசு விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
ஜல்லிக்கட்டு
லால்குடி பாரம்பரிய ஜல்லிக்கட்டு பேரவை சார்பாக அதன் துணை தலைவர் காத்தான் தலைமையில் கொடுத்த மனுவில், எங்கள் ஊரில் சுமார் 70 ஆண்டாக ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு பாரம்பரிய முறைப்படி ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வேண்டும் என்று கூறியிருந்தார்.  இதே போல் வேங்கூர், தெற்கு காட்டூர், நடராசாபுரம், புள்ளம்பாடி உள்ளிட்ட பகுதியை சேர்ந்தவர்களும் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிகோரி மனு கொடுத்தனர்.
முசிறி வடக்கு சித்தாம்பூர் பகுதியை சேர்ந்த புஷ்பா கொடுத்த மனுவில், வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதில் ஏற்பட்ட பிரச்சினையில் எனது கணவர் கொலை செய்யப்பட்டார். அவரை கொலை செய்த அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.
சாதி சான்றிதழ்
முசிறி அடுத்த மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி 10-ம் வகுப்பு மாணவி கிருத்திகா (15) தனக்கு சாதி சான்றிதழ் வேண்டி தனது தாயுடன் வந்து கலெக்டரிடம் மனு அளித்தார். மனுவை விசாரித்த கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மேலும் வயலூர் ரோடு சோமரசம்பேட்டை பகுதியை சேர்ந்த ரேவதி (29) என்பவர் எனது கணவர் வெங்கடேசன் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக கலெக்டரிடம் மனு கொடுத்தார். இதில் சம்பந்தப்பட்ட போலீசார் விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.
546 மனுக்கள்
முகாமில் இலவச வீட்டுமனைப்பட்டா, ஆக்கிரமிப்பு அகற்றக்கோரியது, சாதிச்சான்றுகள் உள்பட 546 மனுக்கள் மாவட்ட கலெக்டரிடம் வழங்கப்பட்டது. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் பழனிகுமார், சமூக பாதுகாப்புத்திட்ட துணை கலெக்டர் (சிறப்பு) அம்பிகாவதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story