தேவூர் அருகே பயங்கரம்: நிதி நிறுவன அதிபர் அடித்துக்கொலை-கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி வெறிச்செயல்
தேவூர் அருகே நிதி நிறுவன அதிபரை, அவரது மனைவி கள்ளக்காதலனுடன் சேர்ந்து அடித்துக்கொலை செய்தார்.
தேவூர்:
தேவூர் அருகே நிதி நிறுவன அதிபரை, அவரது மனைவி கள்ளக்காதலனுடன் சேர்ந்து அடித்துக்கொலை செய்தார்.
இந்த பயங்கர கொலை குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
நிதி நிறுவன அதிபர்
சேலம் மாவட்டம் தேவூர் அருகே புள்ளாக்கவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்த பெருமாள் மகன் தயானந்தன் (வயது 31). இவருக்கும், அவருடைய தாய்மாமா மகள் சேலத்தை சேர்ந்த அன்னப்பிரியா (21) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. தயானந்தன் சொந்தமாக நிதி நிறுவனம் நடத்தி வந்தார்.
நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் தன்னுடைய நண்பருடன் தொழில் விஷயமாக பேசிவிட்டு அவர் தூங்க சென்றார். நள்ளிரவில் அவருடைய மனைவி அன்னப்பிரியா உறவினர்களுக்கு போன் செய்து, தன்னுடைய கணவருக்கு ஜன்னி வந்ததாகவும், இதனால் கீழே விழுந்து தலையில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் கிடப்பதாகவும் பதறியபடி கூறியுள்ளார்.
ரத்த வெள்ளத்தில் பிணம்
அன்னப்பிரியா சொன்னதை கேட்டு அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் விரைந்து வந்து பார்த்தனர். அங்கு படுக்கை அறையில் தரையில் ரத்த வெள்ளத்தில் தயானந்தன் பிணமாக கிடந்தார். இதுபற்றி தேவூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து தயானந்தன் இறந்து கிடந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்குள்ள ரேகைகளை பதிவு செய்தனர். பின்னர் உறவினர்களிடம் போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்தினர். அப்போது தயானந்தன் சாவு தொடர்பாக எந்தவொரு துப்பும் போலீசாருக்கு கிடைக்கவில்லை. பின்னர் போலீசார் தயானந்தன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தாய் பரபரப்பு புகார்
இதற்கிடையே, தயானந்தனின் தாயார் கஸ்தூரி (50) தேவூர் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார்.
அந்த மனுவில், என்னுடைய மருமகளுக்கும், வாலிபர் ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இதனை என்னுடைய மகன் கண்டித்து வந்தான். இதனால் என்னுடைய மருமகள், தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து என்னுடைய மகனை கொலை செய்து விட்டாள். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என்னுடைய மகன் சாவுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
தனி அறையில் விசாரணை
தயானந்தனின் தாயார் புகார் கொடுத்ததை தொடர்ந்து அன்னப்பிரியாவை போலீசார் ரகசியமாக கண்காணித்தனர்.
அப்போது அவர், கணவர் இறந்த துக்கம் கூட இல்லாமல் இயல்பாகவே இருந்தார். இதுபோலீசாருக்கு அவர் மீது சந்தேகத்தை ஏற்படுத்தியது.
உடனே போலீசார் அன்னப்பிரியாவை அழைத்து போலீஸ் நிலையத்தில் தனி அறையில் வைத்து துருவி துருவி விசாரித்தனர். முதலில் தன்னுடைய கணவருக்கு ஜன்னி வந்ததாகவும், அதனால் கட்டிலில் இருந்து கீழே விழுந்து தலையில் அடிபட்டு இறந்து விட்டதாகவும் அவர் கூறினார்.
கள்ளக்காதலன்
போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில், அன்னப்பிரியா தன்னுடைய கணவரை கள்ளக்காதலன் முகேஷ் என்பவருடன் சேர்ந்து தீர்த்துக்கட்டியதை ஒப்புக்கொண்டார். உடனே போலீசார் அன்னப்பிரியாவின் கள்ளக்காதலன் முகேசை பிடித்து போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர்.
அங்கு அன்னப்பிரியா, அவருடைய கள்ளக்காதலன் இருவரிடமும், சங்ககிரி துணை போலீஸ் சூப்பிரண்டு நல்லசிவம், இன்ஸ்பெக்டர் தேவி, சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன் மற்றும் போலீசார் விசாரணை நடத்த்தினர். தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டனர். கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை மனைவி தீர்த்துக்கட்டிய சம்பவம் தேவூர் அருகே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இன்று சிறையில் அடைப்பு
கைதான அன்னப்பிரியா, கள்ளக்காதலன் முகேஷ் இருவரிடமும் விடிய விடிய போலீஸ் நிலையத்தில் விசாரணை நடத்தப்பட்டது. இன்று காலையில் இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட இருக்கிறார்கள் என போலீஸ் அதிகாரிகள் கூறினர்.
Related Tags :
Next Story