கவனத்தை திசை திருப்பி வயதானவர்களிடம் பணம்-நகை பறிப்பு


கவனத்தை திசை திருப்பி வயதானவர்களிடம் பணம்-நகை பறிப்பு
x
தினத்தந்தி 12 Oct 2021 3:39 AM GMT (Updated: 12 Oct 2021 3:39 AM GMT)

சென்னையில் வயதானவர்களிடம் பணம், நகை பறிக்கும் குற்றத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டார்.

கவனத்தை திசை திருப்பி..

சென்னையில் நூதனமுறையில், கவனத்தை திசை திருப்பி கொள்ளை அடிக்கும் கும்பல், வயதான ஆண், பெண்ணை குறிவைத்துதான் தங்கள் ஆட்டத்தை நடத்துகிறார்கள். ஏனெனில் வயதானவர்களிடம்தான் தங்களது ஏமாற்றுவித்தையை எளிதில் அரங்கேற்ற முடியும் என்பது அவர்களுக்கு தெரியும். இது பற்றி போலீசார் எவ்வளவோ விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டபோதிலும், எதுவும் எடுபடவில்லை. தொடர்ந்து இது போன்ற குற்ற ச்சம்பவங்கள் நடந்து கொண்டே இருக்கிறது.

சென்னை செம்பரம்பாக்கம் பகுதியைச்சேர்ந்த ராஜேஸ்வரி என்ற 60 வயது பெண், பஸ் நிறுத்தத்தில் பஸ் ஏற காத்திருந்தார். அந்த பெண்ணிடம் அன்பாக பேசிய இரண்டு நபர்கள், முக கவசம் அணியாததை சுட்டிக்காட்டி, போலீசார் அபராதம் விதித்து விடுவார்கள் என்று பயமுறுத்தி, அவர் அணிந்திருந்த 12 பவுன் நகைகளை பறித்துச்சென்று விட்டனர். இதேபோல சென்னை அசோக்நகர் பகுதியில் ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர் கிருஷ்ணமூர்த்தி (85) என்பவரை ஏமாற்றி, அவர் வங்கியில் இருந்து எடுத்து வைத்திருந்த ரூ.10 ஆயிரத்தை மர்ம நபர் ஒருவர் பறித்துச்சென்று விட்டார்.

முக்கிய குற்றவாளி கைது

இதுபோல வயதானவர்களை குறிவைத்து, அவர்களின் கவனத்தை திசை திருப்பி பணம், நகைகளை பறிக்கும் சம்பவங்கள் சென்னையில் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கிறது. கிருஷ்ணமூர்த்தியிடம் பணத்தை பறித்த குற்றவாளி சிவகுமார் (40) என்பவரை அசோக்நகர் போலீசார் கைது செய்தனர். சிவகுமார் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. ராஜேஸ்வரியிடம் நகையை பறித்துச்சென்ற நபர்களை நசரத்பேட்டை போலீசார் தேடி வருகிறார்கள்.

இது போன்ற கொள்ளைச்சம்பவங்களை தடுக்க, வயதான ஆண், பெண்களை தனியாக வெளியில் அனுப்பாமல் இருக்க வேண்டும். அல்லது அவர்களோடு உறவினர்கள் யாராவது உடன் செல்ல வேண்டும் என்பதுதான் பொதுவான வேண்டுகோளாக உள்ளது.


Next Story