யூனியன் வார்டுகள் தேர்தலிலும் தி.மு.க. கூட்டணி வெற்றிமுகம்


யூனியன் வார்டுகள் தேர்தலிலும் தி.மு.க. கூட்டணி வெற்றிமுகம்
x

தென்காசி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் யூனியன் வார்டுகளிலும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் முன்னிலை பெற்றுள்ளதால் அந்த கூட்டணி வெற்றிமுகத்துடன் உள்ளது.

தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் யூனியன் வார்டுகளிலும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் முன்னிலை பெற்றுள்ளதால் அந்த கூட்டணி வெற்றிமுகத்துடன் உள்ளது.

வாக்குப்பதிவு

ஊரக உள்ளாட்சி தேர்தலில் தென்காசி மாவட்டத்தில் 144 யூனியன் வார்டுகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. தென்காசியில் 9 வார்டுகளில் தேர்தல் நடந்தது. இதில் தென்காசி யூனியனில் 1-வது வார்டில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கலாநிதி 2 ஆயிரத்து 294 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
2-வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளர் பிரியா 1,349 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

3-வது வார்டில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஏ.ஆர்.எம்.அழகுசுந்தரம் 2 ஆயிரத்து 775 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
4-வது வார்டில் எம்.சேக்் அப்துல்லா (தி.மு.க.) 2,309 வாக்குகள் பெற்று வென்றார்.
5-வது வார்டில் செல்வவிநாயகம் (தி.மு.க.) 1,894 வாக்குகள் பெற்று வெற்றிவாகை சூடினார்.

செங்கோட்டை

 செங்கோட்டை யூனியன் கவுன்சிலர் தேர்தலில் 1-வது வார்டில் சுப்புராஜ் (தி.மு.க.) 1,896 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்.
 2-வது வார்டில் திருமலைச்செல்வி (தி.மு.க.) 1,874 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்.
 3-வது வார்டில் கன்னிமுத்து (காங்கிரஸ்) 2,172 ஓட்டுகள் வாங்கி வெற்றி பெற்றார்.
 4-வது வார்டில் வள்ளியம்மாள் (தி.மு.க.) 1,428 ஓட்டுகள் வாங்கி வெற்றி பெற்றார்.
 5-வது வார்டில் கலா (தி.மு.க.) 1,597 ஓட்டுகள் வாங்கி வென்றார்.
 செங்கோட்டையில் 5 கவுன்சிலர் பதவிகளையும் தி.மு.க. கூட்டணி கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.

கடையம்

 கடையத்தில் 17 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க. 11 வார்டுகளிலும், அ.தி.மு.க. 5 வார்டுகளிலும், காங்கிரஸ் ஒரு வார்டிலும் வெற்றி பெற்றுள்ளது.
மற்ற யூனியன்கள்
இதுதவிர சங்கரன்கோவிலில் 17 வார்டுகளுக்கும், குருவிகுளத்தில் 17 வார்டுகளுக்கும், கடையநல்லூரில் 12 வார்டுகளுக்கும், வாசுதேவநல்லூரில் 13 வார்டுகளுக்கும், மேலநீலிதநல்லூரில் 12 வார்டுகளுக்கும், கீழப்பாவூரில் 19 வார்டுகளுக்கும், ஆலங்குளத்தில் 23 வார்டுகளுக்கும் நடைபெற்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

தி.மு.க. கூட்டணி வெற்றி

மொத்தமுள்ள 144 வார்டுகளில் பல வார்டுகளுக்கான வெற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
மீதமுள்ள வார்டுகளில் பெரும்பாலான இடங்களில் தி.மு.க. வேட்பாளர்களும், 5 இடங்களில் அ.தி.மு.க. வேட்பாளர்களும், 3 இடங்களில் ம.தி.மு.க. வேட்பாளர்களும், 1 இடத்தில் காங்கிரஸ் வேட்பாளரும் வெற்றி பெற்று உள்ளனர்.
எனவே, யூனியன் வார்டுகளிலும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களே அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.

முன்னிலை

இதேபோல் இரவு 10 மணி நிலவரப்படி முன்னிலை நிலவரம் தெரிய வந்துள்ளது.
அதன்படி, தி.மு.க. வேட்பாளர்கள் பெரும்பாலான இடங்களிலும், அ.தி.மு.க. வேட்பாளர்கள் 3 இடங்களிலும், ம.தி.மு.க. வேட்பாளர்கள் 4 இடங்களிலும் முன்னிலை பெற்று உள்ளனர். தொடர்ந்து வாக்கு எண்ணும் பணி நடைபெற்றது.
மாவட்ட கவுன்சிலர்களுக்கான தேர்தலில் அதிக இடங்களில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களே வெற்றி பெற்றதால் மாவட்ட பஞ்சாயத்துக்குழுவை தி.மு.க. கூட்டணி கைப்பற்றுகிறது. இதேபோல் யூனியன் வார்டுகளிலும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களே வெற்றிமுகத்துடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகாரிகள் பார்வையிட்டனர்

இதற்கிடையே தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற இடங்களை பார்வையாளர் சங்கர், கலெக்டர் கோபால சுந்தரராஜ், போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் ஆகியோர் பார்வையிட்டனர்.

Next Story