வாரச்சந்தையில் அதிகாரிகள் சோதனை; 10 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்


வாரச்சந்தையில் அதிகாரிகள் சோதனை; 10 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்
x
தினத்தந்தி 12 Oct 2021 7:48 PM GMT (Updated: 12 Oct 2021 7:48 PM GMT)

திருப்புவனம் வாரச்சந்தையில் அதிகாரிகள் சோதனை நடத்தி 10 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்தனர்.

திருப்புவனம்
திருப்புவனம் வாரச்சந்தையில் அதிகாரிகள் சோதனை நடத்தி 10 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்தனர்.
வாரச்சந்தை
திருப்புவனத்தில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய், புதன் கிழமைகளில் வாரச்சந்தைகள் நடைபெறும். இதில் செவ்வாய்க்கிழமை ஆடு, கோழி, காய்கறி, மற்றும் பழ வகைகள் வியாபாரம் நடைபெறும். புதன்கிழமை மாட்டுச்சந்தை மட்டும் நடைபெறும். செவ்வாய்க்கிழமை நடைபெறும் காய்கறிச் சந்தையில் உள்ளூர், வெளியூர் வியாபாரிகள் அதிகம் வந்து காய்கறி மற்றும் வீட்டு உபயோக பொருட்களை விற்பனை செய்வார்கள். சந்தையில் திருப்புவனம், மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் வந்து காய்கறி, பழங்கள், வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கிச் செல்வார்கள். அதுசமயம் பிளாஸ்டிக் பைகளில் வியாபாரிகள் பொருட்களை கொடுப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. 
 சோதனை
சிவகங்கை மாவட்ட நிர்வாகமும், நேரு யுவகேந்திராவும் இணைந்து தூய்மை இந்தியா திட்டத்தின் படி பிளாஸ்டிக் ஒழிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று திருப்புவனம் வாரச்சந்தையில் நேரு யுவகேந்திராவைச் சேர்ந்த கார்த்திகைச்செல்வி, கலைச்செல்வன், திருப்புவனம் தேர்வு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் சந்திரகலா, இளநிலை உதவியாளர் நாகராஜ், துப்புரவு மேற்பார்வையாளர் பாண்டி மற்றும் பலர் சேர்ந்து அனைத்து வியாபாரிகளிடமும் பிளாஸ்டிக் பைகள் மூலம் காய்கறிகள் விற்கப்படுகிறதா என திடீர் சோதனையில் ஈடுபட்டனர். 
அப்போது 10 கிலோ பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர். மேலும் ரூ.20 ஆயிரம் வரை அபராதமும் விதிக்கப்பட்டது.

Next Story