மீண்டும் ஓம்பெட்டா பகுதிக்கு வந்த ஆட்கொல்லி புலி
கோழிக்கண்டியில் இருந்து இடம்பெயர்ந்து மீண்டும் ஓம்பெட்டா பகுதிக்கு ஆட்கொல்லி புலி வந்தது.
கூடலூர்
கோழிக்கண்டியில் இருந்து இடம்பெயர்ந்து மீண்டும் ஓம்பெட்டா பகுதிக்கு ஆட்கொல்லி புலி வந்தது.
மயக்க ஊசி குறி தவறியது
நீலகிரி மாவட்டம் மசினகுடி வனப்பகுதியில் தேடப்பட்டு வந்த ஆட்கொல்லி புலி நேற்று முன்தினம் ஓம்பெட்டா வழியாக கோழிக்கண்டி பகுதிக்கு இடம் பெயர்ந்தது. இது ஓம்பெட்டா வனப்பகுதியில் பொருத்தி இருந்த தானியங்கி கேமராவில் அந்த புலியின் உருவம் பதிவாகியதன் மூலம் உறுதியானது. இதையொட்டி கோழிக்கண்டி வனப்பகுதியில் வனத்துறையினர் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது புதருக்குள் பதுங்கி இருந்த அந்த புலியை நோக்கி மயக்க ஊசியை செலுத்தினர். ஆனால் அடர்ந்த புதர் என்பதால், குறி தவறிவிட்டது. அதன்பிறகு மாலை நேரம் ஆனதால், தேடுதல் வேட்டை கைவிடப்பட்டது.
மீண்டும் இடம்பெயர்ந்தது
இந்த நிலையில் நேற்று 18-வது நாளாக கோழிக்கண்டி பகுதியில் ஆட்கொல்லி புலியை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். மேலும் பல்வேறு இடங்களில் பொருத்திய கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது இரவோடு, இரவாக கோழிக்கண்டியில் இருந்து மீண்டும் இடம்பெயர்ந்து ஓம்பெட்டா வனப்பகுதிக்கு புலி திரும்பி சென்றது தெரியவந்தது. இதனால் அந்த வனப்பகுதியில் பல குழுக்களாக பிரிந்து வனத்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இருப்பினும் புலி குறித்த எந்த தடயமும் கிடைக்கவில்லை.
இதற்கிடையில் ஆட்கொல்லி புலி இடம்பெயர்ந்து வருவதால் கூடலூர், ஸ்ரீமதுரை, முதுமலை, மசினகுடி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம மக்கள் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும் என்று போலீசார் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
Related Tags :
Next Story