தொடர் மழையால் ஏற்காடு மலைப்பாதையில் சீரமைப்பு பணி தொய்வு-3-வது நாளாக போக்குவரத்து நிறுத்தம்


தொடர் மழையால் ஏற்காடு மலைப்பாதையில் சீரமைப்பு பணி தொய்வு-3-வது நாளாக போக்குவரத்து நிறுத்தம்
x
தினத்தந்தி 13 Oct 2021 7:42 PM GMT (Updated: 13 Oct 2021 7:42 PM GMT)

தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் ஏற்காடு மலைப்பாதையில் சீரமைப்பு பணி தொய்வடைந்துள்ளது. இதனால் அந்த பகுதியில் 3-வது நாளாக நேற்று போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

ஏற்காடு:
மண் சரிவு
ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் கடந்த சில வாரங்களாக அடிக்கடி மழை பெய்து வந்தது. இதனிடையே கடந்த 11-ந் தேதி ஏற்காட்டில் அதிகளவு மழை கொட்டியது. இதனால் ஏற்காடு செல்லும் சாலையில் மலைப்பாதையில் ஆங்காங்கே திடீர் நீர்வீழ்ச்சிகள் தோன்றின. 
இந்தநிலையில் இரவு திடீரென 2-வது கொண்டை ஊசி வளையில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் சீரமைப்பு பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டனர். இந்த பணியை நேற்று முன்தினம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மழையால் தொய்வு
கடந்த 2 நாட்களாக நடந்து வந்த சீரமைப்பு பணி, நேற்று 3-வது நாளாக நீடித்தது. இந்த பணியில் 4 பொக்லைன் எந்திரங்கள், 10 லாரிகள் மற்றும் 700 மண் மூட்டைகளுடன் 130 பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் மாலை மற்றும் இரவில் பெய்து வரும் மழையால் சீரமைப்பு பணியில் தொய்வு ஏற்பட்டு வருதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 
மலைப்பாதையில் சீரமைப்பு பணிகளை நேற்று நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது உதவி பொறியாளர் ராஜேஷ்குமார், சாலை ஆய்வாளர் ரமேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.
தொடர் மழையால் ஏற்காடு மலைப்பாதையை சீரமைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதால் 3-வது நாளாக நேற்றும் அந்த வழியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

Next Story