இடைத்தேர்தல் நடைபெறும் 2 தொகுதிகளிலும் எடியூரப்பா பிரசாரம் - பசவராஜ் பொம்மை பேட்டி
மாநிலத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் 2 தொகுதியிலும் எடியூரப்பா பிரசாரம் செய்வார் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
2 தொகுதிகளுக்கு தேர்தல்
கர்நாடகத்தில் காலியாக உள்ள சிந்தகி, ஹனகல் ஆகிய 2 சட்டசபை தொகுதிகளுக்கும் வருகிற 30-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த 2 தொகுதிகளிலும் வெற்றி பெற முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை முடிவு செய்துள்ளார். இதற்கான தேர்தல் வியூகங்களை அவர் வகுத்து வருவதாக சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் 2 தொகுதிகளிலும் முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா பிரசாரம் செய்யாவிட்டால் பா.ஜனதாவுக்கு பின்னடைவு ஏற்படும் என்று ஆய்வில் தெரியவந்தது.
அதே நேரத்தில் இடைத்தேர்தலில் பிசாரம் செய்வது குறித்து எடியூரப்பா, இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. அதற்கு முன்பாக எடியூரப்பாவின் உதவியாளர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாாிகள் சோதனை நடத்தி இருந்தனர். இது எடியூரப்பாவுக்கு கடிவாளம் போடுவதற்காக திட்டமிட்டு நடந்த சோதனை என்று எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றச்சாட்டு கூறி வருகின்றனர்.
எடியூரப்பா பிரசாரம்
வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனை காரணமாக எடியூரப்பாவும் அதிருப்தி அடைந்ததாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக இடைத்தேர்தல் நடைபெறும் 2 தொகுதிகளிலும் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து எடியூரப்பா பிரசாரம் செய்வாரா? என்ற சந்தேகம் எழுந்தது.
இந்த விவகாரம் குறித்து தாவணகெரே மாவட்டம் ஹொன்னாளியில் நேற்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையிடம் நிருபர்கள் எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சிந்தகி, ஹனகல் ஆகிய 2 சட்டசபை தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் பா.ஜனதாவுக்கு சாதகமான அலை வீசுகிறது. மக்கள் பா.ஜனதாவை ஆதரிக்க தயாராகி விட்டனர். சிந்தகி, ஹனகல் தொகுதிகளில் முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா பிரசாரம் செய்வார். 2 தொகுதிகளிலும் 2 நாட்கள் அவர் பிரசாரம் செய்ய உள்ளார். நானும், அவரும் சேர்ந்து ஒன்றாக பிரசாரம் செய்ய தீர்மானித்துள்ளோம்.
இடைத்தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும்படி எடியூரப்பாவுக்கு நானே அழைப்பு விடுத்தேன். அவரும் இடைத்தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட வருவதாக தெரிவித்துள்ளார். 20-ந் தேதிக்கு பின்பு 2 தொகுதிகளிலும் எடியூரப்பா பிரசாரம் மேற்கொள்வார். இடைத்தேர்தலில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் தோல்வி அடைவது உறுதி. பா.ஜனதாவின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.
2 நாட்களில் முடிவு
முஸ்லிம்கள் தனிக்கட்சி தொடங்க வேண்டும் என்று மேல்-சபை உறுப்பினர் சி.எம்.இப்ராஹிம் தெரிவித்துள்ளார். அவருக்கு திடீரென்று இந்த ஞானஉதயம் எப்படி வந்தது என்று தெரியவில்லை. மாநிலத்தில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து விட்டது.
பள்ளிகளை திறப்பது குறித்து இன்னும் 2 நாட்களில் அதிகாரிகள், நிபுணர்கள் குழுவினருடன் ஆலோசித்து இறுதி முடிவு எடுக்கப்படும். கொரோனா காரணமாக பிறப்பிக்கப்பட்ட கட்டுப்பாடுகளில் தளர்வுகள் செய்வது குறித்தும் இன்னும் 2 நாட்கள் ஆலோசித்து முடிவு செய்யப்படும்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.
Related Tags :
Next Story