உளுந்தூர்பேட்டை ஒன்றிய அலுவலகத்தில் வெற்றி சான்றிதழ் கேட்டு ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் அதிகாரிகளிடம் மனு


உளுந்தூர்பேட்டை ஒன்றிய அலுவலகத்தில் வெற்றி சான்றிதழ் கேட்டு ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் அதிகாரிகளிடம் மனு
x
தினத்தந்தி 17 Oct 2021 4:12 PM GMT (Updated: 17 Oct 2021 4:12 PM GMT)

உளுந்தூர்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் 2 பேர் வெற்றிசான்றிதழ் கேட்டு அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர்

உளுந்தூர்பேட்டை

ஊராட்சி வார்டு உறுப்பினர்

உளுந்தூர்பேட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பரிந்தல் ஊராட்சியில் 2-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு அதே பகுதியை சேர்ந்த குழந்தைவேல் சீப்பு சின்னத்திலும் மற்றும் மணிகண்டன் சாவி சின்னத்திலும் போட்டியிட்டனர். 
வாக்கு எண்ணிக்கையின்போது மணிகண்டனை விட குழந்தைவேல் 62 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தனது தோல்வியை ஒப்புக்கொண்டு மணிகண்டனும் அந்த கிராமத்தில் உள்ள வாட்ஸ்அப் குழுவில் தனக்கு சாவி சின்னத்தில் வாக்களித்த 51 பேருக்கு நன்றி என குறிப்பிட்டிருந்தார்.

அறிவிப்பில் முரண்பாடு

இந்த நிலையில் குழந்தைவேல் வெற்றிச் சான்றிதழை வாங்க ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு வந்த போது பரிந்தல் ஊராட்சியில் 2-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட குழந்தைவேலுவுக்கு சாவி சின்னமும், மணிகண்டனுக்கு சீப்பு சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் எனவே மணிகண்டன் தான் தேர்தலில் வெற்றி பெற்றார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த குழந்தைவேல் தனக்கு சீப்பு சின்னம் ஒதுக்கப்பட்டதற்கான ஆதாரங்களை அதிகாரிகளிடம் காட்டியபோது இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். ஆனால் வாக்கு எண்ணிக்கை முடிந்து 6 நாட்கள் ஆகியும் குழந்தைவேலுவுக்கு இதுவரை வெற்றிச் சான்றிதழ் வழங்கவில்லை.

குன்னத்தூர்

அதேபோல் குன்னத்தில் கிராம ஊராட்சி 5-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு சாவி சின்னத்தில் போட்டியிட்ட இளவரசி அய்யப்பன் என்பவர் வெற்றி பெற்ற நிலையில் அவருக்கு பதிலாக அந்த சின்னத்தில் வேறு ஒருவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 
இதற்கிடையே தங்களின் வெற்றியை உடனடியாக உறுதி செய்து சான்றிதழ் வழங்கக்கோரி 2 வேட்பாளர்களும் தங்கள் ஆதரவாளர்களுடன்  உளுந்தூர்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு வந்து தங்களுக்கு உடனடியாக சான்றிதழை வழங்கக்கோரி அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர்.

Related Tags :
Next Story