முன்பதிவு டிக்கெட் இன்றி நுழைந்த கபடி வீரர்களுக்கு அபராதம் விதிப்பு


முன்பதிவு டிக்கெட் இன்றி நுழைந்த கபடி வீரர்களுக்கு அபராதம் விதிப்பு
x

திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்துக்குள் டிக்கெட் இன்றி நுழைந்த கபடி வீரர்களுக்கு அபராதம் விதித்ததால் அவர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி, அக்.19-
திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்துக்குள் டிக்கெட் இன்றி நுழைந்த கபடி வீரர்களுக்கு அபராதம் விதித்ததால் அவர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கபடி வீரர்கள்
நெல்லை மாவட்டம் பணகுடி பகுதியைச் சேர்ந்த கபடி விளையாட்டு வீரர்கள் 10 பேர் சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்ற மாநில அளவிலான கபடி போட்டியில் பங்கேற்றனர். போட்டியில் வெற்றி பெற்ற அவர்கள் வெற்றி கோப்பையுடன், தங்களது சொந்த ஊருக்கு செல்வதற்காக சேலத்தில் இருந்து பஸ்சில் நேற்று காலை திருச்சிக்கு வந்தனர்.
பின்னர் சென்னையில் இருந்து திருச்சி வழியாக குருவாயூர் செல்லும் ரெயிலில் நெல்லை செல்வதற்காக அவர்கள் காலை 10 மணி அளவில் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்துக்கு வந்தனர். அதில் சிலர் முககவசம் அணியவில்லை என்று கூறப்படுகிறது. அப்போது, அங்கிருந்த டிக்கெட் பரிசோதகர்கள் அவர்களை மறித்து டிக்கெட்டை கேட்டுள்ளனர். அதற்கு அவர்கள் நாங்கள் டிக்கெட் எடுக்கத்தான் உள்ளே வந்துள்ளோம் என்று கூறினர். ஆனால் டிக்கெட் பரிசோதகர் முன்பதிவு செய்தால் தான் ரெயிலில் பயணிக்க முடியும், ரெயில் நிலையம் உள்ளே வரவேண்டும் என்றால் பிளாட்பாம் டிக்கெட் வாங்க வேண்டும் என்று அவர்களிடம் கூறினார்.
அபராதம் விதிப்பு
அதற்கு அவர்கள், எங்களுக்கு முன்பதிவு செய்யவேண்டும் என்பது பற்றி தெரியவில்லை, நாங்கள் விளையாட்டு வீரர்கள் என்பதால் எங்களை மன்னித்து, டிக்கெட் முன்பதிவு செய்து கொடுங்கள் என்று கெஞ்சினார்கள். ஆனால், டிக்கெட் பரிசோதகர் அதை பொருட்படுத்தாமல், அவர்களுக்கு ரூ.1,600 அபராதம் விதித்தார்.
மேலும் அபராதத்தை கட்டினால் தான் இங்கிருந்து செல்ல முடியும் என கறாராக கூறி அபராதத்தை வசூல் செய்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், எங்களுக்கு சாப்பிட கூட பணம் கிடையாது, ஊருக்கு செல்ல டிக்கெட்டுக்கு மட்டுமே பணம் வைத்துள்ளோம் என்று கூறி அங்கிருந்த அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பஸ்சில் ஊர் திரும்பினர்
அப்போது அங்கு செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்கள் இதுபற்றி அறிந்து வீரர்களுக்கு உதவும்படி அதிகாரிகளிடம் எடுத்து கூறினார்கள். ஆனால் அதிகாரிகள் அபராதத்தைரத்துசெய்யவில்லை. இதனால் வேறு வழியின்றி அவர்கள் ரெயில் நிலையத்தில் இருந்து வெளியேறி, பஸ்சில் சொந்தஊருக்கு புறப்பட்டு சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story