காரில் 750 கிலோ ரேஷன் அரிசி கடத்தல்-முதியவர் உள்பட 2 பேர் கைது


காரில் 750 கிலோ ரேஷன் அரிசி கடத்தல்-முதியவர் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 19 Oct 2021 1:13 AM IST (Updated: 19 Oct 2021 1:13 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் 750 கிலோ ரேஷன் அரிசியை காரில் கடத்திய முதியவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி, அக்.19-
திருச்சியில் 750 கிலோ ரேஷன் அரிசியை காரில் கடத்திய முதியவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ரேஷன் அரிசி கடத்தல்
திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியில் உள்ள காவல்துறை சோதனை சாவடி எண் 2-ல் கடந்த 16-ந்தேதி இரவு 10.15 மணி அளவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் காவேரி தலைமையிலான போலீசார் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக கோவை மாவட்ட பதிவு எண் கொண்ட ஒரு கார் வந்தது. அந்த காரை போலீசார் மறித்து சோதனை செய்தனர்.
சோதனையில் காரில் 18 சாக்கு மூட்டைகளில் மொத்தம் 750 கிலோ ரேஷன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து காரில் வந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் திருச்சி அரியமங்கலம் நேருஜி நகர் சாமிநாதன் தெருவை சேர்ந்த அக்பர் (வயது 61), திருச்சி இ.பி.சாலை தேவதானம் கோனார் ஸ்டோரை சேர்ந்த சுரேஷ் (32) என்பது தெரியவந்தது.
2 பேர் கைது
மேலும் அவற்றை கோழி தீவனத்துக்காகவும், மாவு தயாரிக்கவும் கடத்திச்செல்வதும், சுரேஷ் மீது ஏற்கனவே சேலம் மற்றும் திருச்சியில் ரேஷன் அரிசி கடத்திய வழக்குகள் இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அக்பர், சுரேஷ் மீது எடமலைப்பட்டி புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். மேலும் ரேஷன் அரிசியும் பறிமுதல் செய்யப்பட்டது.
விபசாரம்
 ஸ்ரீரங்கத்தில் ராஜகோபுரம் அருகே உள்ள எஸ்.எம். லாட்ஜில் விபசாரம் நடப்பதாக வந்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அறிவழகன் தலைமையிலான போலீசார் அந்த லாட்ஜில் சோதனை நடத்தினார்கள். அப்போது, அங்கு 2 பெண்களை வைத்து விபசாரம் நடப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக லாட்ஜ் உரிமையாளரான திருவானைக்காவல் பகுதியை சேர்ந்த முருகன் (56), பிரசன்னா (60) மற்றும் மணிகண்டன் (33), மதி (25) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் மணிகண்டன், மதியை கைது செய்த போலீசார், விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 2 பெண்களையும் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
மாணவி மாயம்
 திருச்சி மேல அம்பிகாபுரம் காந்திவீதியை சேர்ந்த ஆதி வெங்கட்ராமனின் மகள் சுஸ்மிதா (18). திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு படித்து வந்த இவர், சம்பவத்தன்று மாலை வீட்டில் இருந்து வெளியே சென்றவர், பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் அரியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
 திருச்சி ஏர்போர்ட் பகுதியை சேர்ந்த என்ஜினீயரிங் மாணவர் பிரவீன் (22), அவருடைய நண்பர் சரவணன் ஆகியோரை பீர் பாட்டிலால் தாக்கிய வழக்கில் புத்தூர் எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்த ராஜேஷ் குமாரை (27) அரசு ஆஸ்பத்திரி போலீசார் கைது செய்தனர். மேலும் அவருடைய தம்பி ரஞ்சித்குமாரை தேடிவருகிறார்கள்.
 திருவானைக்காவல் கோவில் அருகே ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ராஜேந்திரனை (54) தாக்கியதாக அவருடைய உறவினர் கார்த்திகேயனை (31) ஸ்ரீரங்கம் போலீசார் கைது செய்தனர்.

Next Story