நிலத்தடி நீரை அதிகம் எடுப்பதால் பாதிப்பு


நிலத்தடி நீரை அதிகம் எடுப்பதால் பாதிப்பு
x
தினத்தந்தி 19 Oct 2021 5:32 PM GMT (Updated: 19 Oct 2021 5:32 PM GMT)

நாகாட்சி ஊராட்சி பகுதியில் நிலத்தடி நீரை அதிகம் எடுப்பதால் பாதிப்பு ஏற்படுவதால் நடவடிக்கை எடுக்கக்கோரி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பனைக்குளம், 
நாகாட்சி ஊராட்சி பகுதியில் நிலத்தடி நீரை அதிகம் எடுப்பதால் பாதிப்பு ஏற்படுவதால் நடவடிக்கை எடுக்கக்கோரி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீர் ஆதாரம்
மண்டபம் ஊராட்சி ஒன்றிய நாகாட்சி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நிலத்தடி நீரை கனரக வாகனத்தின் மூலம் எடுத்து வெளியில் விற்பனை செய்து வருவதாக நாகாட்சி கிராமத்தின் பொதுமக்கள் ஊராட்சி தலைவர் ராணி கணேசனை நேரடியாக சந்தித்து உடனடியாக குடிநீர் எடுப்பதை தடுக்க வேண்டும். 
இதனால் நிலத்தடி நீர் ஆதாரம் குறைந்து வருகிறது. நிலத்தடி நீரை காக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்து மனுகொடுத்தனர். அதில் கூறியிருப்ப தாவது:- நாகாட்சி கிராமத்தில் கடந்த சில வருடங்களாக சில நபர்கள் தங்களது சுயலாபத்திற்காக கிராமத்தை சுற்றி கிணறுகள் அமைத்து அதிக திறன் கொண்ட மின் மோட்டார்கள் மூலம் குடிநீருக்காக நிலத்தடி நீரை இரவு பகலாக உறிஞ்சி எடுத்து லாரிகளில் ஏற்றி சென்று பிற தனியார் நிறுவனங்களுக்கும் கட்டிட வேலைகளுக்கும் சாலைகளுக்கும்  விற்பனை செய்து வருகின்றனர்.
அவதி 
இதனால் குடிநீருக்காக நிலத்தடி நீரை மட்டுமே நம்பி இருக்கும் கிராம மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். நிலத்தடி நீர் ஆதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக கடந்த ஒரு சில மாதங்களாக ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு கொடுத்தோம். 
மேலும் சிறிய அளவில் முற்றுகைப் போராட்டம் நடத்தியும் நீரை எடுப்பதை தடுத்து நிறுத்தி இருந்தோம். இருப்பினும் தற்போது மீண்டும் முன்பைவிட அதிக அளவில் மின் மோட்டார்கள் அமைத்து நீரை அதிக அளவில் லாரிகளில் ஏற்றி செல்கின்றனர். 
எனவே ஊராட்சி மன்றத்தின் மூலம் இது சம்பந்தமாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது. ஊராட்சித் தலைவர் ராணி கணேசன் கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்டு இதற்கான நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

Next Story