சமூக ஒற்றுமைக்கு எதிராக பா.ஜ.க. செயல்படுகிறது சிதம்பரம் விழாவில் தொல்.திருமாவளவன் எம்.பி. குற்றச்சாட்டு
சமுக ஒற்றுமைக்கு எதிராக பா.ஜ.க. செயல்படுகிறது என சிதம்பரத்தில் நடந்த பிறந்தநாள் விழாவில் தொல்.திருமாவளவன் எம்.பி. குற்றம் சாட்டி பேசினார்.
சிதம்பரம்,
தொல்.திருமாவளவன் பிறந்தநாள் விழா
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சமூக நீதி சமூகங்களின் ஒற்றுமை கருத்தரங்கு மற்றும் தொல்.திருமாவளவன் எம்.பி. பிறந்த நாள் விழா நடந்தது. விழாவுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் பால அறவாழி தலைமை தாங்கினார்.
காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன், முதன்மை செயலாளர்கள் பாவரசு, உஞ்சை அரசன், சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் வ.க.செல்லப்பன், கடலூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தாமரைச்செல்வன், மாவட்ட செய்தி தொடர்பாளர் பெரு.திருவரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சமூக ஒற்றுமை
சிறப்பு அழைப்பாளர்களாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில தலைவர் கே.பாலகிருஷ்ணன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் எம்.எல்.ஏ., திராவிட கழக பொதுச்செயலாளர் துரை, சந்திரசேகர், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில நிர்வாக குழு உறுப்பினர் மணிவாசகம் ஆகியோர் கலந்துகொண்டு சமூகநீதி சமூகங்களின் ஒற்றுமை குறித்து பேசினா்.
நாட்டை காப்பாற்ற...
விழாவில் தொல்.திருமாவளவன் எம்.பி. பேசியதாவது:-
தமிழகத்தில் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். சமூகநீதி சமூகங்களின் ஒற்றுமைக்கு எதிராக செயல்பட்டு வருகிறார்கள். எனவே எஸ்.சி., எஸ்.டி., எம்.பி.சி., ஓ.பி.சி., முஸ்லிம், மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர்கள் என அனைவரும் ஒற்றுமையுடன் இருந்து வருகிற நாடாளுமன்ற தேர்தலில் மோடியை ஆட்சிக்கு வர முடியாத நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும். மோடியை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதோடு, அவரிடம் இருந்து நாட்டை காப்பாற்ற வேண்டும்.
விழிப்புணா்வு
இதை நாம் அனைவரும் செய்யவில்லை என்றால் அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் அரசியலமைப்பு சட்டத்தை ‘டிக்ளர்’ செய்து விடுவார்கள். ஒரே நாடு, ஒரே தேசம், ஒரே கலாசாரம், ஒரே நிலை என்ற பாகுபாட்டை கொண்டு வந்து விடுவார்கள். பின்னர் தேர்தல் இல்லை என அறிவிப்பார்கள்.
இவை அனைத்தையும் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் செய்துவிடுவார்.
எனவே அவரிடம் இருந்து வருகிற 2024-ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தல் மூலம் நாட்டை காப்பாற்ற வேண்டும். மேலும் சமூக ஒற்றுமை குறித்து காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வீடு வீடாக, பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு தொல்.திருமாவளவன் எம்.பி. பேசினார்.
Related Tags :
Next Story