மின்கம்பத்திற்கு இறுதி அஞ்சலி செலுத்தி நூதன போராட்டம்


மின்கம்பத்திற்கு இறுதி அஞ்சலி செலுத்தி நூதன போராட்டம்
x
தினத்தந்தி 21 Oct 2021 5:05 PM GMT (Updated: 2021-10-21T22:35:32+05:30)

ராமநாதபுரத்தில் எரியாத மின்விளக்குகள் அமைந்துள்ள மின்கம்பங்களுக்கு பெரியாரிய உணர்வாளர்கள் சார்பில் மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தும் நூதன போராட்டம் நடைபெற்றது.

ராமநாதபுரம், 
ராமநாதபுரத்தில் எரியாத மின்விளக்குகள் அமைந்துள்ள மின்கம்பங்களுக்கு பெரியாரிய உணர்வாளர்கள் சார்பில் மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தும் நூதன போராட்டம் நடைபெற்றது.
தடுப்பு
ராமநாதபுரத்தில் போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்க அச்சுந்தன்வயல் முதல் பட்டணம்காத்தான் வரையிலான சாலையினை விரிவாக்கம் செய்து சாலையின் நடுவில் தடுப்பு அமைக்கப்பட்டது. 
இந்த தடுப்புகளின் நடுவில் வழிநெடுக எல்.இ.டி விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளன. ரூ.40 கோடி மதிப்பிலான இந்த சாலை பணிகள் முடிவடைந்த நிலையில் விளக்குகள் எரியாமல் உள்ளன. எந்த விளக்குகளும் எரியாத நிலையில் இரவு நேரங்களில் சாலையில் செல்பவர்கள் விபத்தில் சிக்கி வருகின்றனர். 
இரவில் வெளிச்சம் தெரியாமலும், சாலையின் குறுக்கில் செல்லும் கால்நடைகள் தெரியாமலும், சாலையை கடக்கும் மனிதர்கள் தெரியாமலும் மோதி பலர் பலியாகி வருகின்றனர். இதுதவிர, சாலையின் நடுவில் தடுப்பு உள்ளது கூட இரவு நேரங்களில் தெரிவதில்லை. 
புகார்
இதுகுறித்து பலர் புகார் செய்த நிலையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்தநிலையில் நேற்று இவ்வாறு எரியாத மின்விளக்குகள் அமைந்துள்ள மின் கம்பங்கள் பயனில்லாமல் உள்ளதால் அதற்கு மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தும் நூதன போராட்டம் நடைபெற்றது.
பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற இந்த நூதன போராட்டத்திற்கு பெரியார் பேரவைத் தலைவர் நாகேசுவரன் தலைமை வகித்தார். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல செயலாளர் முகமது யாசின், வீர குல தமிழர் படையின் மாநில ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன், வைகை விவசாய பாசன சங்க பொதுச்செயலாளர் மதுரைவீரன், இஸ்லாமிய ஜனநாயக பேரவை மாவட்ட அமைப்பாளர் சீனி முகமது சபீர், பெரியார் பேரவை நிர்வாகி செல்லையா உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மின்கம்பங்களுக்கு மலர்வளையம் வைத்து சங்கு ஊதி இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.

Next Story