இல்லம் தேடி கல்வி திட்டம் குறித்து விழிப்புணர்வு கலைப்பயணம்
விழுப்புரத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் இல்லம்தேடி கல்வி திட்டம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த கலைப்பயணத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
விழுப்புரம்,
விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் காலை பள்ளிக்கல்வித்துறை சார்பில் இல்லம் தேடி கல்வி என்ற திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக விழிப்புணர்வு கலைப்பயண நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியை மாவட்ட கலெக்டர் டி.மோகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து, இத்திட்டத்தின் முக்கியத்துவத்தை பொதுமக்களிடையே விளக்கும் விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கலைக்குழுக்கள் ஊர்வலம், பாடல், தப்பாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், நாடகம் ஆகிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் கலைப்பயணம் மேற்கொண்டதை கலெக்டர் டி.மோகன் பார்வையிட்டார். அதன் பின்னர் அவர் கூறியதாவது:-
கற்றல் இடைவெளியை குறைக்க
தமிழக முதல்-அமைச்சரின் ஆணையின்படி விழுப்புரம் மாவட்டத்தில் அரசு கொண்டு வந்துள்ள இல்லம் தேடி கல்வி என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா நோய் தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதையடுத்து 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளியை குறைக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டமானது விழுப்புரம் மாவட்டத்தில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் 72,911 மாணவ- மாணவிகள் மற்றும் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் 51,967 மாணவ- மாணவிகள் ஆக மொத்தம் 1,24,878 பேர் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளில் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்த திட்டத்தின் செயல்பாடுகள் சார்ந்த விழிப்புணர்வை பொதுமக்கள், மாணவ- மாணவிகளிடையே ஏற்படுத்தும் விதமாக மாவட்டத்தில் 3 கலைக்குழுக்கள் மூலம் இன்று (நேற்று) முதல் அடுத்த 15 நாட்கள் கலை நிகழ்ச்சிகளை பள்ளி மற்றும் கிராம அளவில் தொடர்ந்து நடத்த உள்ளனர். மேலும் தன்னார்வலர்களும் இத்திட்டத்தில் இணைந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சங்கர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா, விழுப்புரம் கோட்டாட்சியர் அரிதாஸ், தாசில்தார் வெங்கடசுப்பிரமணியன், மாவட்ட கல்வி அலுவலர் சுந்தரமூர்த்தி, பயிற்சி மாவட்ட கல்வி அலுவலர் கவுசர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story