வங்கிகள் விவசாயிகளுக்கு கடன் வழங்க மறுக்கின்றன


வங்கிகள் விவசாயிகளுக்கு கடன் வழங்க மறுக்கின்றன
x
தினத்தந்தி 22 Oct 2021 5:34 PM GMT (Updated: 22 Oct 2021 5:34 PM GMT)

கடலூரில் 1½ ஆண்டுக்குபிறகு நடந்த நேரடி குறைகேட்பு கூட்டத்தில் வங்கிகள் கடன் வழங்க மறுப்பதாக கலெக்டரிடம் விவசாயிகள் குற்றம் சாட்டினர்.

கடலூர், 

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாதந்தோறும், கலெக்டர் தலைமையில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, கடந்த ஆண்டு மார்ச் மாதம் இறுதியுடன் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் ரத்து செய்யப்பட்டது. அதன்பிறகு கொரோனா வைரஸ் படிப்படியாக குறைய தொடங்கியதால், கடந்த ஆண்டு இறுதியில் இருந்து விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் காணொலி காட்சி மூலம் நடத்தப்பட்டு வந்தது.
ஆனால் குறைகேட்பு கூட்டம் கலெக்டர் தலைமையில் நேரடியாக நடத்தப்படவில்லை. இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு பெருமளவில் குறைந்து விட்டதையடுத்து, அக்டோபர் மாதம் முதல் கலெக்டர், விவசாயிகளிடம் நேரடியாக மனுக்கள் பெற்று குறைகளை கேட்டறிவார் என அறிவிக்கப்பட்டது.

குறைகளை கேட்டறிந்த கலெக்டர்

அதன்படி கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கடந்த 1½ ஆண்டுக்கு பிறகு நேற்று விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கி, விவசாயிகளிடம் நேரடியாக மனுக்கள் பெற்று, குறைகளை கேட்டறிந்தார்.
அப்போது தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மாதவன் கூறுகையில், பயிர் காப்பீட்டு திட்டத்தை வெளிப்படை தன்மையுடன் செயல்படுத்திட வேண்டும். கடுமையாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் மிக குறைவான அளவே வந்துள்ளது. அதனால் விடுபட்டுள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்திட வேண்டும். வேளாண் விற்பனை மையங்களில் தரமற்ற விதை விற்கப்படுகிறது. போலி விதை நெல் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்திட வேண்டும். மாவட்டம் முழுவதும் யூரியா, டி.ஏ.பி. உரம் வேளாண் விரிவாக்க மையங்களில் கிடைக்கவில்லை. தனியார் நிறுவனங்களில் அவை அதிக விலைக்கு விற்கப்படுகிறது. அதனால் மானிய விலையில் உரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தற்காலிக பாலம்

குறிஞ்சிப்பாடியை சேர்ந்த குமரகுரு கூறுகையில், எங்கள் பகுதியில் கடந்த 3 முறை மணிலா சாகுபடி செய்தும், கனமழையால் அழுகிவிட்டது. அதற்கு காப்பீடு தொகை வழங்க வேண்டும். மரவள்ளி கிழங்கு அதிகளவில் சாகுபடி செய்யப்படுவதால் நல்லூர், மங்களூர் பகுதியில் மரவள்ளி ஆலை அமைக்க வேண்டும். அனைத்து நீர்நிலை வாய்க்கால்களையும் தூர்வார வேண்டும் என்றார்.
அயன்குறிஞ்சிப்பாடி விவசாயி ராமலிங்கம் கூறுகையில், தாழ வாய்க்காலின் குறுக்கே தற்காலிக பாலம் அமைக்க வேண்டும். என்.எல்.சி.யில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரால் சித்தேரி தூர்ந்து போய்விட்டது. அதனால் ஏரியை தூர்வார வேண்டும் என்றார்.

கடன் வழங்குவதில்லை

கீழ்அனுவம்பட்டு ரவீந்திரன் பேசுகையில், அடங்கல் வழங்குவதில் வி.ஏ.ஓ.க்கள் தாமதப்படுத்துகின்றனர். அதனால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளோம். மேலும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலும், வங்கிகளிலும் விவசாயிகளுக்கு சரிவர கடன் வழங்குவதில்லை. அதனால் விவசாயிகளுக்கு கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பாசிமுத்தான் ஓடையை தூர்வார வேண்டும் என்றார்.
மேல்புவனகிரி வேல்முருகன் கூறுகையில், தங்கள் பகுதியில் உரம் தட்டுப்பாடு நிலவுகிறது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் உரம் கிடைப்பதில்லை. ஆனால் தனியார் கடைகளில் எப்போதும் உரம் கிடைத்தாலும், அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் விவசாயிகள் வண்டல் மண் எடுக்க அனுமதிக்க வேண்டும். சேத்தியாத்தோப்பு-கம்மாபுரம் சாலை குறுகலாக உள்ளது. அதனை அகலப்படுத்தி, சாலையை சீரமைக்க வேண்டும் என்றார்.

நீர்நிலைகள்

அப்போது பெரும்பாலான விவசாயிகள், வங்கிகள் கடன் வழங்க மறுக்கின்றன என்றும், நீர்நிலைகளை விரைந்து தூர்வார வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
அதற்கு கலெக்டர் பாலசுப்பிரமணியம், விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற அந்தந்த துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும் விவசாயிகளுக்கு முறையாக வங்கி கடன் வழங்க வேண்டும் எனவும், தடையின்றி உரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வருவாய்) ரஞ்ஜித்சிங் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story