பாலியல் வழக்கில் குற்றவாளிக்கு பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு பணி இடைநீக்கம்


பாலியல் வழக்கில் குற்றவாளிக்கு பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு பணி இடைநீக்கம்
x
தினத்தந்தி 22 Oct 2021 9:05 PM GMT (Updated: 22 Oct 2021 9:05 PM GMT)

பாலியல் தொல்லை வழக்கில் வக்கீலுக்கு உதவிய உருவா பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு ஆகியோரை பணி இடைநீக்கம் செய்து மாநகர போலீஸ் கமிஷனர் சசிகுமார் உத்தரவிட்டுள்ளார்.

மங்களூரு: பாலியல் தொல்லை வழக்கில் வக்கீலுக்கு உதவிய உருவா பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு ஆகியோரை பணி இடைநீக்கம் செய்து மாநகர போலீஸ் கமிஷனர் சசிகுமார் உத்தரவிட்டுள்ளார். 

பாலியல் தொல்லை

வடமாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் மங்களூரு சட்ட கல்லூரியில் படித்து வந்தார். இவர், மங்களூரு நகர் கருங்கல்பாடி பகுதியை சேர்ந்த வக்கீல் ராஜேஷ் பட் என்பவரிடம் பயிற்சி பெற்று வந்தார். கருங்கல்பாடி பகுதியில் உள்ள ராஜேஷ் பட்டின் அலவலகத்துக்கு தினமும் மாலை சென்று கோர்ட்டு சம்பந்தமான பணிகளை பார்த்து வந்தார். 

இந்த நிலையில் சம்பவத்தன்று சட்ட கல்லூரி மாணவிக்கு ராஜேஷ் பட் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. மேலும் அவரிடம் தவறாக நடக்க முயன்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் அந்த மாணவி அதிர்ச்சி அடைந்தார். 

புகாரை வாங்கவில்லை

பின்னர் தனக்கு நடந்த சம்பவம் குறித்து உருவா போலீசில் சட்டகல்லூரி மாணவி புகார் கொடுத்தார். வக்கீல் ராஜேஷ் பட் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கடிதம் வாயிலாகவும் எழுதி கொடுத்துள்ளார். ஆனால் அந்த புகாரை வாங்காமல் உருவா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீகலா, ஏட்டு பிரமோத் ஆகியோர் வக்கீல் ராஜேஷ் பட்டுக்கு ஆதரவாக சட்டக்கல்லூரி மாணவியிடம் சமாதானமாக பேசி உள்ளனர். 

இந்த வழக்கை இத்துடன் முடித்து கொள்வோம், வழக்கு எதுவும் பதிவு செய்ய வேண்டாம் என்றும் சட்டக்கல்லூரி மாணவியிடம் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். 

பணி இடைநீக்கம்

இதுகுறித்து மங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் சசிகுமாரிடம் சட்டக்கல்லூரி மாணவி புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய சசிகுமார் உத்தரவிட்டார். இந்த விசாரணையில், உருவா போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீகலா, ஏட்டு பிரமோத் ஆகியோர் வக்கீல் ராஜேஷ் பட்டுக்கு உதவியது தெரியவந்தது. 

இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீகலா, ஏட்டு பிரமோத் ஆகியோரை பணி இடைநீக்கம் செய்து மாநகர போலீஸ் கமிஷனர் சசிகுமார் உத்தரவிட்டுள்ளார். மேலும் மாணவியை மிரட்டியதாக 3 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

Next Story