தர்மபுரி சிறையில் அடைக்க அழைத்து வந்தபோது கொலை வழக்கு கைதி தப்பி ஓட்டம்


தர்மபுரி சிறையில் அடைக்க அழைத்து வந்தபோது கொலை வழக்கு கைதி தப்பி ஓட்டம்
x
தினத்தந்தி 23 Oct 2021 3:25 AM IST (Updated: 23 Oct 2021 3:25 AM IST)
t-max-icont-min-icon

தளி அருகே மனைவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கைதி தர்மபுரி சிறையில் அடைக்க அழைத்து வந்தபோது தப்பி ஓடி விட்டார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

தர்மபுரி:
தளி அருகே மனைவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கைதி தர்மபுரி சிறையில் அடைக்க அழைத்து வந்தபோது தப்பி ஓடி விட்டார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
மனைவி கொலை
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே உள்ள குஞ்சிகிரி பாளையத்தை சேர்ந்தவர் ரூபா (வயது 31). இவருடைய கணவர் கார்த்திக் (37). இவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 குழந்தைகள் உள்ளனர். கார்த்திக் ஓசூரில் ஒரு ரப்பர் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாக ரூபா பெற்றோர் வீட்டில் இருந்தார்.
நேற்று முன்தினம் கார்த்திக் மாமனார் வீட்டுக்கு சென்றார். அப்போது அவர்களிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த கார்த்திக் அங்கிருந்த கத்தியால் ரூபாவின் கழுத்தை அறுத்தார். இதனால் ரூபா ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து கார்த்திக் தேன்கனிகோட்டை போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். இந்த கொலை தொடர்பாக தளி போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்தனர்.
தப்பியோட்டம்
இந்த நிலையில் விசாரணைக்கு கார்த்திக்கை கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீஸ் பாதுகாப்புடன் தர்மபுரி சிறைக்கு நேற்று இரவு போலீசார் அழைத்து வந்தனர். அந்த பகுதியில் கண்ணிமைக்கும் நேரத்தில் போலீசாரின் பிடியில் இருந்து கார்த்திக் தப்பி ஓடி விட்டார். இதனால் அவரை அழைத்து வந்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து தர்மபுரி மாவட்டத்தில் அனைத்து பகுதியிலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். தப்பியோடிய கைதி கார்த்திக்கை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மனைவியை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட கைதி தப்பி ஓடிய சம்பவம் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story