கறம்பக்குடி அருகே இருதரப்பினரிடையே மோதலில் 4 பேர் காயம்; சாலை மறியல் போலீசார் குவிப்பு
கறம்பக்குடி அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 4 பேர் காயமடைந்தனர். ஒரு தரப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
கறம்பக்குடி
மோதல்
கறம்பக்குடி அருகே உள்ள பல்லவராயன் பத்தை கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல். இவரது மனைவி ரேணுகா (வயது 25). இவர், புதுப்பட்டி சாலை ஓரத்தில் பூக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையின் மீது புதுப்பட்டியை சேர்ந்த மணிகண்டன் (26) என்பவர் ஒட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மோதியது. இதை ரேணுகா, பழனிவேல் மற்றும் உறவினர் திருமேனிநாதன் ஆகியோர் தட்டி கேட்டனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு மோதலில் கை கலப்பானது. இதில் ரேணுகா, திருமேனிநாதன் ஆகியோர் காயமடைந்தனர்.
இதை அறிந்த ரேணுகாவின் உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டோர் புதுப்பட்டியில் திரண்டனர். அப்போது ஏற்பட்ட தகராறில் மணிகண்டன் மற்றும் அவரது தாய் பழனியம்மாள் ஆகியோரும் காயமடைந்தனர்.
சாலை மறியல்
இதனிடையே ரேணுகாவை தாக்கியவர்களை கைது செய்ய கோரி அவரது தரப்பை சேர்ந்தவர்கள் கறம்பக்குடி-புதுக்கோட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் சாலையின் 3 புறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இரு தரப்பினரிடையே மோதல் ஏற்படும் சூழல் நிலவியது. தள்ளு-முள்ளு ஏற்பட்டு பதற்றம் உருவானது. இதுகுறித்து தகவலறிந்த ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு வடிவேல், கறம்பக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து சாலைமறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.
போலீசார் குவிப்பு
இந்த மோதலில் காயமடைந்தவர்கள் கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து கறம்பக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க புதுப்பட்டி பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இச்சம்பவம் கறம்பக்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story